விவசாயிக்கு அரிவாள் வெட்டு
திருக்குறுங்குடி அருகே விவசாயிக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.
ஏர்வாடி:
திருக்குறுங்குடி அருகே உள்ள தளவாய்புரம் வடக்குத்தெருவை சேர்ந்தவர் நம்பிராஜன் (வயது 40). விவசாயி. சம்பவத்தன்று இவர் ஊருக்கு அருகே உள்ள தனது வயலுக்கு சென்று விட்டு, நம்பிதலைவன் பட்டயம், சந்தை தெரு வழியாக மொபட்டில் வந்து கொண்டிருந்தார்.
அப்போது அங்கு வந்த நம்பிதலைவன் பட்டயத்தை சேர்ந்த மணிகண்டன் மகன் ஆறுமுகம், முத்துபாண்டி மகன் மகாராஜன் என்ற கார்த்திக் ஆகியோர் நம்பிராஜனை வழிமறித்து எங்கள் ஊருக்கு நீ எப்படி வரலாம் என கேட்டு தகராறில் ஈடுபட்டனர். மேலும் அவரை அவதூறாக பேசி அரிவாளால் வெட்டியதாக கூறப்படுகிறது. அவரது சத்தம் கேட்டு அக்கம், பக்கத்தினர் ஓடி வரவும், 2 பேரும் தப்பி ஓடி விட்டனர். இதில் படுகாயம் அடைந்த நம்பிராஜன் சிகிச்சைக்காக ஏர்வாடி தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். இதுபற்றிய புகாரின் பேரில் திருக்குறுங்குடி போலீசார் ஆறுமுகம், மகாராஜன் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர்.