கரைவலையில் குறைவான மீன்களே சிக்கின

சீசன் தொடங்கி ஒரு மாதம் ஆன நிலையிலும் தனுஷ்கோடி பகுதியில் கரைவலையில் குறைவான மீன்களே சிக்கின. விலை இல்லாததால் மீனவர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

Update: 2021-12-12 17:53 GMT
ராமேசுவரம்,

சீசன் தொடங்கி ஒரு மாதம் ஆன நிலையிலும் தனுஷ்கோடி பகுதியில் கரைவலையில் குறைவான மீன்களே சிக்கின. விலை இல்லாததால் மீனவர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

மீன்பிடி தொழில்

ராமேசுவரம் அருகே புயலால் அழிந்து போன தனுஷ்கோடி கடற்கரை உள்ளது. அதுபோல் தனுஷ்கோடி கடற்கரையில் இன்று வரையிலும் மீன்பிடி தொழிலை நம்பி கம்பிப்பாடு, பாலம், எம்.ஆர் சத்திரம் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 200-க்கும் மேற்பட்ட மீனவ குடும்பத்தினர் வாழ்ந்து வருகின்றனர்.
தனுஷ்கோடி பகுதியில் வாழ்ந்துவரும் ஏராளமான மீனவர்கள் இப்போதும் பழமை மாறாமல் பராம்பரிய கரைவலை மீன்பிடிப்பில் மிகுந்த ஆர்வத்துடன் ஈடுபட்டு வருகின்றனர். அதுபோல் இந்த கரைவலையை கொண்டு 6 மாதம் வடக்கு கடல் பகுதியிலும் ஆறு மாதம் தென் கடல் பகுதியிலும் மீனவர்கள் மீன் பிடிப்பது வழக்கம்.

மீன்கள் குறைவு

இந்தநிலையில் தனுஷ்கோடி தென்கடல் பகுதியில் இந்த ஆண்டின் கரைவலை மீன்பிடி சீசன் தொடங்கி ஒரு மாதத்திற்கு மேல் ஆகின்றது. தனுஷ்கோடி தென்கடல் பகுதியான எம்.ஆர்.சத்திரம் முதல் கம்ப்பிப்பாடு ,அரிச்சல்முனை வரையிலான இடைப்பட்ட கடற்கரை பகுதியில் பல இடங்களில் ஏராளமான மீனவர்கள் பாரம்பரிய கரைவலை மீன்பிடியில் ஈடுபட்டிருந்தனர். கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு கரைவலை மீன்பிடிப்பில் எதிர்பார்த்த அளவு மீன்கள் கிடைக்காததால் விலையும் குறைந்து காணப்பட்டது. இதனால் மீனவர்கள் மிகுந்த ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
இதுபற்றி தனுஷ்கோடி பகுதியைச் சேர்ந்த மீனவர் முனிராஜ் கூறும்போது, கடந்த ஆண்டு தென் கடல் பகுதியில் கரைவலை மீன் பிடிப்பில் 700 கிலோ முதல் 1 டன் வரையிலும் கிடைத்தன. ஆனால் இந்த ஆண்டு கரைவலை மீன்பிடி சீசன் தொடங்கி ஒரு மாதத்திற்கு மேலாகியும் தினமும் 300 கிலோ முதல் 400 கிலோ வரையில் மட்டுமே மீன்கள் கிடைத்து வருகின்றன.
மழை காரணம்
கடந்த ஆண்டு கரைவலை மீன்பிடிப்பில் வலையில் சிக்கிய சூடை மீன் ஒரு கிலோ ரூ.110 வரையிலும் விலை போனது. முரல், மாவுலா உள்ளிட்ட அனைத்து மீன்களுக்கும் நல்ல விலை கிடைத்தது. ஆனால் இந்த ஆண்டு சூடை மீன் கிலோ ரூ.20-க்கு மட்டுமே விலை போகின்றது. மற்ற மீன்களும் குறைவான விலைக்கு தான் போகின்றன. அதிக அளவு பெய்த மழை காரணமாகவும் கடலில் சேரும் வெள்ள நீராலும் அனைத்து மீன்களும் ஆழ்கடல் பகுதியை நோக்கி இடம்பெயர்ந்து சென்று விட்டன. அதனால் தான் வலையில் குறைவான மீன்கள் சிக்கின.
 இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்