அ.தி.மு.க.வுடன் கூட்டணி நீடிக்கிறது; ஜி.கே.வாசன் பேட்டி
நகர்புற உள்ளாட்சி தேர்தலிலும் அ.தி.மு.க.வுடன் கூட்டணி நீடிக்கிறது என்று தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் கூறினார்.
தண்டராம்பட்டு
நகர்புற உள்ளாட்சி தேர்தலிலும் அ.தி.மு.க.வுடன் கூட்டணி நீடிக்கிறது என்று தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் கூறினார்.
அ.தி.மு.க.வுடன் கூட்டணி நீடிக்கிறது
திருவண்ணாமலை மாவட்டம் தானிப்பாடியை அடுத்த ரெட்டியார்பாளையம் கிராமத்தில் நேற்று தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசன் கட்சி கொடியை ஏற்றினார்.
அதைத் தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
நகர்புற உள்ளாட்சி தேர்தலிலும் அ.தி.மு.க. உடனான கூட்டணி நீடிக்கிறது. கட்சியின் செயற்குழு கூட்டம் சென்னையில் வருகிற 18-ந்தேதி நடைபெற உள்ளது.
இந்த ஆலோசனை கூட்டத்தில் நகர்புற உள்ளாட்சி தேர்தலில் தமிழகத்தில் எந்தெந்த இடங்களில் போட்டியிடுவது என்பது குறித்து ஆலோசனை செய்து முடிவு எடுக்கப்படும்.
திருவண்ணாமலை முதல் அரூர் வரை நெடுஞ்சாலையை நான்கு வழிச்சாலையாக மாற்ற வேண்டும். தானிப்பாடியில் நிரந்தரமாக நெல் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும். கொரோனா தொற்றுக்கு பிறகு நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது.
இணைப்பு பாலம்
இந்த கூட்டத்தொடர் முழுமையாக நடக்க வேண்டும். சட்ட மசோதாக்கள் அனைத்தும் விவாதம் செய்து நிறைவேற்ற வேண்டும். மேலும் எதிர்க்கட்சிகள் அவையை முடக்கக்கூடாது.
பிரதமரை நேரில் சந்தித்து தமிழகத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளேன்.
தமிழகத்தில் தமிழ் மொழிக்கு முன்னுரிமை அளிப்பது வரவேற்கத்தக்கது. இருப்பினும் மற்ற மொழிகளுக்கு கொடுக்கக்கூடிய முக்கியத்துவத்தை குறைக்கக்கூடாது.
தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தையும் தி.மு.க. நிறைவேற்ற வேண்டும்.
தானிப்பாடி அருகில் உள்ள பீமாரப்பட்டி, மலையனூர், செக்கடி ஆகிய மலை கிராமங்களுக்கு இடையே இணைப்பு பாலம் அமைக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.