பல்லடம்,
பல்லடம் என்.ஜி.ஆர். ரோடு நகரத்தின் முக்கிய கடைவீதி ஆகும். இங்கு அனைத்து வகையான வியாபார கடைகளும் உள்ளன. அருகில் காய்கறி மார்க்கெட்,. பஸ் நிலையம் இருப்பதால் என்.ஜி.ஆர். ரோடு எந்த நேரமும் பரபரப்பாக இயங்கும். இந்த நிலையில் என்.ஜி.ஆர்.ரோட்டில் சாலையோரக் கடைகள் அதிக அளவில் முளைத்ததால் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது. இதனால் பொதுமக்கள் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகி வருகின்றனர்.
இந்த நிலையில் ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற வேண்டும், வாகனங்கள் நிறுத்த வசதி செய்ய வேண்டும், வாடகை கட்ட தவணை அளிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 16-ந் தேதி ஒரு நாள் அடையாள கடையடைப்பு மற்றும் உண்ணாவிரத போராட்டத்தை வியாபாரிகள் அறிவித்துள்ளனர். இது தொடர்பாக சமூக வலைத்தளங்களில் தகவல் வெளியானது. இந்த நிலையில் நகராட்சி ஆணையாளர் விநாயகம் அறிவுறுத்தலின் பேரில் நகரமைப்பு ஆய்வாளர் வெங்கடேஷ், பணி மேற்பார்வையாளர் ராசுக்குட்டி உள்ளிட்ட அதிகாரிகள் என்.ஜி.ஆர்.ரோட்டில் இருந்த ஆக்கிரமிப்புகளை அகற்றினர். வியாபாரிகளிடம் கடைகள் முன்பு ஆக்கிரமிப்புகள் இருந்தால் ஒவ்வொரு முறையும் ரூ.2 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என எச்சரித்தனர். மேலும் வாகனங்கள் நிறுத்த பெயிண்ட் மூலம் மஞ்சள் கோடுகள் வரையப்பட்டது.