விஷ வாயு தாக்கி தொழிலாளி பலி

தொண்டி அருகே மீன் எண்ணெய் தயாரிக்கும் தொழிற்சாலையில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்த போது விஷ வாயு தாக்கி தொழிலாளி பலியானார். 2 பேர் கவலைக்கிடமான நிலையில் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

Update: 2021-12-12 17:36 GMT
தொண்டி,

தொண்டி அருகே மீன் எண்ணெய் தயாரிக்கும் தொழிற்சாலையில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்த போது விஷ வாயு தாக்கி தொழிலாளி பலியானார். 2 பேர் கவலைக்கிடமான நிலையில் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

மீன் எண்ணெய் தயாரிக்கும் தொழிற்சாலை

ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி அருகே உள்ள மச்சூர் கிராமத்தில் தனியார் மீன் எண்ணெய் தயாரிக்கும் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இங்கு வெளிமாநிலத்தை சேர்ந்த சிலர் வேலை செய்து வருகின்றனர். இந்த ஆலையில் சுமார் 5 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட தொட்டியில் இருந்த ரசாயனம் கலந்த கழிவுநீரை அங்கு பணிபுரியும் வெளி மாநில தொழிலாளர்கள் சிலர் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர்.
அப்போது ஒடிசா மாநிலத்தை சேர்ந்த நபின் ஓரம் (வயது 24) என்பவர் அந்த தொட்டிக்குள் இறங்கி சுத்தம் செய்தார். நீண்ட நேரமாகியும் அவர் வெளியே வரவில்லை. இதனால் கீழே நின்று கொண்டிருந்த ஒடிசாசை சேர்ந்த தொழிலாளர்கள் ஜாஜ்மன் குஜூர்(20), அனில்மாஜி (25) ஆகிய 2 பேரும் அவரை தேடி தொட்டிக்குள் இறங்கினர். அப்போது அந்த தொட்டி கீழே சாய்ந்து விழுந்துள்ளது.
உடனே அருகில் இருந்தவர்கள் சென்று பார்த்த போது தொட்டியில் இருந்து விஷவாயு தாக்கியதில் 3 தொழிலாளர்கள் மயங்கி கிடந்தனர். அதனை தொடர்ந்து அவர்களை மீட்டு தொண்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

தொழிலாளி சாவு

அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் ராமநாதபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களை பரிசோதித்த டாக்டர்கள் நபின் ஓரம் இறந்து விட்டதாக தெரிவித்தனர். ஜாஜ்மன் குஜூர், அனில்மாஜி ஆகிய இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர்கள் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
 இந்த சம்பவம் பற்றிய தகவல் அறிந்ததும் தொண்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேசன் மற்றும் போலீசார் விஷ வாயு தாக்கி உயிரிழந்த நபின்ஓரம் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தார். மேலும் திருவாடானை தாசில்தார் செந்தி்ல்வேல் முருகன் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினார்.

பரபரப்பு

இதுதொடர்பாக மச்சூர் குரூப் கிராம நிர்வாக அலுவலர் ராதா, தொண்டி போலீசில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இச் சம்பவம் பற்றிய தகவல் அப்பகுதியில் பரவியதால் பெரும் பரபரப்பு காணப்பட்டது.
--------

மேலும் செய்திகள்