குப்பை கொட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து நடைபெற்ற காத்திருப்பு போராட்டம்
குப்பை கொட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து நடைபெற்ற காத்திருப்பு போராட்டம்
அனுப்பர்பாளையம்,
அம்மாபாளையம் அருகே பாறைக்குழியில் குப்பை கொட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து நடைபெற்ற காத்திருப்பு போராட்டத்தில் பொதுமக்கள் 2000-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
குப்பை கொட்ட எதிர்ப்பு
திருப்பூர் மாநகராட்சி 1 மற்றும் 2-வது மண்டலங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் சேகரமாகும் குப்பைகள் பூண்டி ரிங் ரோட்டில் உள்ள தனியார் பாறைக்குழியில் கொட்டப்பட்டு வந்தன.
அந்த பாறைக்குழி நிரம்பியதை தொடர்ந்து திருமுருகன்பூண்டியை அடுத்த அம்மாபாளையம் அருகே உள்ள கானக்காடு பகுதியில் உள்ள தனியாருக்கு சொந்தமான பாறைக்குழியில் குப்பைகளை கொட்டுவது என மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்து கடந்த சில மாதங்களாக அங்கு குப்பைகள் கொட்டப்பட்டு வருகிறது.
தொடக்கத்தில் இருந்தே அங்கு குப்பை கொட்டுவதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேலும் இது தொடர்பாக கலெக்டர், மாநகராட்சி, திருமுருகன்பூண்டி பேரூராட்சி நிர்வாகத்திற்கு பலமுறை பொதுமக்கள் சார்பில் மனு கொடுக்கப்பட்டது. பல்வேறு போராட்டங்களும் நடத்தப்பட்டன.
காத்திருப்பு போராட்டம்
கடந்த சில நாட்களுக்கு முன்பு திருப்பூர் வந்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடமும் இந்த பிரச்சினை தொடர்பாக பொதுமக்கள் மனு வழங்கினார்கள். ஆனால் தொடர்ந்து அதே பகுதியில் குப்பை கொட்டப்பட்டு வருகிறது. இந்த நிலையில் பாறைக்குழியில் குப்பைகளை கொட்டி வரும் மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து அம்மாபாளையம் ஊர் பொது நலக்கமிட்டி, அனைத்து குடியிருப்போர் நலச்சங்கம் மற்றும் அனைத்து கட்சி சார்பில் கவன ஈர்ப்பு காத்திருப்பு போராட்டம் அம்மாபாளையம் பஸ் நிறுத்தத்தில் நேற்று நடைபெற்றது.
திரளான பொதுமக்கள்
இந்த போராட்டத்திற்கு ஒருங்கிணைப்பாளர் ஜெயக்குமார் தலைமை தாங்கினார். இதில் ராதாகிருஷ்ணன் வீதி, ராம்நகர், பத்மாவதி நகர், எம்.ஜி.ஆர்.நகர், குமரன் காலனி, சொர்ணபுரி வில்லா, தண்ணீர் பந்தல் காலனி உள்பட அம்மாபாளையம் சுற்று வட்டாரத்தை சேர்ந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
அந்த பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 8-ம் வகுப்பு படிக்கும் மாணவி நக்சத்ரா குப்பை கொட்டுவதால் குடிநீர் மாசுபடுகிறது என்பதை விளக்கும் வகையில் படங்களுடன் கூடிய வாசகம் அடங்கிய பதாகையை உடலில் மாட்டியபடி கலந்து கொண்டார். பெண்கள் சிலர் சீருடையுடன் கலந்து கொண்டதுடன், 15-க்கும் மேற்பட்ட திருநங்கைகளும் கலந்துகொண்டனர்.
நிலத்தடி நீர் மாசுபடும்
அப்போது பொதுமக்கள் கூறியதாவது:-
இந்த பகுதியில் உள்ள 2 தனியார் பள்ளிகள் மற்றும் ஒரு அரசு பள்ளியில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். பள்ளியில் ஜன்னல்களை திறந்து வைத்தால் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் கதவுகளை மூடியே வைக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் மாணவர்களுக்கு நோய் பாதிப்பு ஏற்படும் நிலை உள்ளது.
குப்பைகள் கொட்டப்பட்டு சில மாதங்களே ஆகி உள்ள நிலையில் இந்த பகுதியில் வரும் தண்ணீர் நிறம் மாறி வருகிறது. நிலத்தடி நீர் மாசுபடும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. இந்த போராட்டத்திற்கு பிறகும் இதே நிலை தொடர்ந்தால் அடுத்த கட்ட போராட்டம் நடத்தப்படும்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
இந்த போராட்டத்தையொட்டி ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.