கோவிலில் திருடிய 2 வாலிபர்கள் கைது

இரணியல் அருகே கோவிலில் திருடிய 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.

Update: 2021-12-12 17:22 GMT
திங்கள்சந்தை, 
இரணியல் அருகே கோவிலில் திருடிய 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
இந்த சம்பவம் குறித்த விவரம் வருமாறு:-
கோவிலில் திருட்டு
இரணியல் அருகே உள்ள காட்டுவிளையில் ஒரு குடும்ப கோவில் உள்ளது. இங்கு முருகன் (வயது 62) என்பவர் பூசாரியாக இருந்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு பூஜைகள் முடிந்த பின்பு வழக்கம் போல் கோவிலை பூட்டிவிட்டு சென்றார். 
நேற்று காலையில் கோவிலுக்கு சென்ற போது பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது கோவிலில் இருந்த 1½ அடி உயரம் உள்ள 2 குத்துவிளக்குகள், ஒரு கைமணி என ரூ. 5 ஆயிரம் மதிப்பிலான பொருட்கள் திருடப்பட்டு இருந்தது. 
இதுகுறித்து முருகன் இரணியல் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து கோவிலில் திருடிய மர்ம நபர்களை தேடி வந்தனர்.
2 பேர் கைது
இந்த நிலையில் நேற்று காலையில் சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர் ராஜரத்தினம் தலைமையிலான போலீசார் இரணியல் காற்றாடிமுக்கு சந்திப்பில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகப்படும் படியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பேசினர். இதனால் அவர்களை போலீஸ் நிலையம் கொண்டு சென்று விசாரணை நடத்தினர்.
அப்போது அவர்கள் அகஸ்தீஸ்வரத்தை சேர்ந்த கண்ணன் (24) குருந்தன்கோட்டை சேர்ந்த 18 வயது வாலிபர் என்பதும், கண்ணாட்டுவிளை கோவிலில் திருடியதும் தெரிய வந்தது. மேலும், அவர்கள் வந்த மோட்டார் சைக்கிளும் திருட்டு மோட்டார் சைக்கிள் என்பதும் தெரிய வந்தது. இதையடுத்து 2 பேரையும் போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்து மோட்டார் சைக்கிளையும், கோவிலில் திருடிய பொருட்களையும் பறிமுதல் செய்தனர். 

மேலும் செய்திகள்