கறிக்கோழி விலை தொடர் சரிவு: பண்ணையாளர்களுக்கு ரூ.300 கோடி இழப்பு
கறிக்கோழி விலை சரிவடைந்து இருப்பதால் கடந்த 10 நாட்களில் மட்டும் பண்ணையாளர்களுக்கு சுமார் ரூ.300 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.
நாமக்கல்:
கறிக்கோழி பண்ணைகள்
தமிழகத்தில் பல்லடம், நாமக்கல், ஈரோடு உள்ளிட்ட பகுதிகளில் 25 ஆயிரம் கறிக்கோழி பண்ணைகள் உள்ளன. இவற்றின் மூலம் தினசரி 30 லட்சம் கிலோ கறிக்கோழிகள் உற்பத்தி செய்யப்பட்டு, தமிழகம் மட்டுமின்றி, ஆந்திரா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களுக்கு விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படுகிறது.
பண்ணை கொள்முதல் விலையை பல்லடத்தில் உள்ள கறிக்கோழி ஒருங்கிணைப்புக்குழு (பி.சி.சி.) தினமும் நிர்ணயம் செய்கிறது.
விலை ஏற்றத்தாழ்வு
பொதுவாக கொள்முதல் விலை தீபாவளி, கிறிஸ்துமஸ், புத்தாண்டு, பொங்கல் போன்ற திருவிழா நாட்களில் அதிகரிப்பதும், புரட்டாசி, கார்த்திகை மாதங்கள் மற்றும் ரம்ஜான் பண்டிகை காலங்களில் குறைவதும் வாடிக்கையான ஒன்று.
இந்த நிலையில் கார்த்திகை மாதத்தையொட்டி தொடர் சரிவை சந்தித்த கறிக்கோழி விலை, கடந்த 1-ந் தேதி கிலோ ரூ.93 ஆக நிர்ணயம் செய்யப்பட்டது. பின்னர் படிப்படியாக உயர்ந்து கிலோ ரூ.102 ஆனது. ஆனால் கடந்த 8-ந் தேதி மற்றும் 10-ந் தேதி விலை மீண்டும் சரிவடைந்ததால் கிலோ ரூ.93 ஆனது. இதற்கிடையே நேற்று முன்தினம் மீண்டும் கிலோவுக்கு ரூ.10 அதிகரித்தது. இந்த விலை ஏற்றத்தாழ்வு பண்ணையாளர்களுக்கு கடும் இழப்பை ஏற்படுத்தி உள்ளது.
ரூ.300 கோடி இழப்பு
இது குறித்து தமிழ்நாடு முட்டைக்கோழி பண்ணையாளர்கள் மார்க்கெட்டிங் சொசைட்டி தலைவரும், கறிக்கோழி உற்பத்தியாளருமான வாங்கிலி சுப்ரமணியம் கூறியதாவது:-
ஒரு கிலோ கறிக்கோழியின் உற்பத்தி செலவு ரூ.100 ஆகிறது. தற்போது, வியாபாரிகள் கட்டாயப்படுத்தி விற்பனை செய்ய வைக்கின்றனர். அதாவது 10 ஆயிரம் கிலோ விற்பனை செய்யும் போது, கூடுதலாக ஆயிரம் கிலோ சேர்த்து விற்பனை செய்யும் படி நிர்பந்திக்கின்றனர்.
அதனால் கொள்முதல் விலை ரூ.80 ஆக குறைந்தது. அதுவும் கிலோவுக்கு, கொள்முதல் விலையில் இருந்து ரூ.5 வரை குறைத்தே வியாபாரிகள் வாங்குகின்றனர். 15 சதவீதம் அதிகம் விற்பனை செய்ய நினைக்கும்போது, வியாபாரிகள் விலையை குறைத்து கேட்கின்றனர். அதன் காரணமாக கொள்முதல் விலை குறைக்கப்பட்டு உள்ளது.
உற்பத்தி செலவை காட்டிலும், கொள்முதல் விலை குறைவாக இருப்பதால், ஒரு கிலோவுக்கு ரூ.15 வீதம் பண்ணையாளர்களுக்கு இழப்பு ஏற்படுகிறது. அந்த வகையில் தினமும் தலா ரூ.30 கோடி என, கடந்த 10 நாட்களில் சுமார் ரூ.300 கோடி இழப்பு ஏற்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.