தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்: 1,063 பேருக்கு பணி நியமன ஆணை-அமைச்சர் மதிவேந்தன் வழங்கினார்
நாமக்கல் அறிஞர் அண்ணா அரசு கல்லூரியில் நடந்த தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் தேர்வு செய்யப்பட்ட 1,063 பேருக்கு பணி நியமன ஆணைகளை அமைச்சர் மதிவேந்தன் வழங்கினார்.
மோகனூர்:
வேலைவாய்ப்பு முகாம்
நாமக்கல் மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு துறை மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் ஆகியவை சார்பில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம், மோகனூரில் உள்ள நாமக்கல் அறிஞர் அண்ணா அரசு கலை கல்லூரியில் நடந்தது. இதில் 166 தனியார் நிறுவனங்கள் கலந்து கொண்டு தங்களுக்கு தேவையான பணியாளர்களை தேர்வு செய்தனர்.
இதற்காக கல்லூரி வளாகத்தில் தனித்தனி மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 3,021 பேர் முகாமில் கலந்து கொண்டனர். அதில் 1,063 பேர் தேர்வு செய்யப்பட்டனர். அவர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கும் நிகழ்ச்சி கல்லூரி கலை அரங்கில் நடந்தது.
பணி நியமன ஆணை
நிகழ்ச்சிக்கு நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயாசிங் தலைமை தாங்கினார். மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் ஷீலா மாயவன் வரவேற்றார். மாநிலங்களவை உறுப்பினர் கே.ஆர்.என்.ராஜேஸ்குமார், நாமக்கல் எம்.எல்.ஏ. ராமலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் தமிழக சுற்றுலா துறை அமைச்சர் மதிவேந்தன் கலந்து கொண்டு தேர்வானவர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார்.
அப்போது அவர் பேசியதாவது:-
முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி 2006-ம் ஆண்டில் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து 5 ஆண்டுகளாக வேலையின்றி காத்திருந்தவர்களுக்கு உதவித்தொகை வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார். தற்போது முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்த தனியார் வேலைவாய்ப்பு முகாம்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்த உத்தரவிட்டுள்ளார். அதன்படி ஒவ்வொரு மாவட்டத்திலும் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது.
தமிழ் பாடத்தில் தேர்ச்சி
தமிழ் வழியில் படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்க வேண்டும் என்பதற்காக டி.என்.பி.எஸ்.சி. நடத்தும் போட்டி தேர்வுகளில் தமிழ் பாடத்தில் தேர்ச்சி கட்டாயம் என மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். மேலும் அரசு பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு பல்வேறு நலத்திட்டங்களையும் அறிவித்துள்ளார்.
இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்ச்சியில் மாவட்ட மகளிர் திட்ட அலுவலர் பிரியா, கல்லூரி முதல்வர் (பொறுப்பு) பங்காரு, மோகனூர் வட்டார அட்மா திட்டக்குழு தலைவர் நவலடி, லத்துவாடி ஊராட்சி மன்ற தலைவர் பரமேஸ்வரி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.