புனிதநீர் எடுத்து வந்த பக்தர்கள்

நத்தத்தில் சந்தன கருப்புசாமி கோவில் திருவிழாவையொட்டி பக்தர்கள் புனித நீர் எடுத்து ஊர்வலமாக வந்தனர்.

Update: 2021-12-12 16:56 GMT
நத்தம்: 

நத்தத்தில் உள்ள அரண்மனை சந்தன கருப்புசாமி கோவில் திருவிழாவை முன்னிட்டு கரந்தமலையில் இருந்து புனிதநீர் எடுத்து வரும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இத்துடன் அழகர்மலை, மஞ்சமலை, பகுதிகளில் இருந்தும் தீர்த்தங்கள் எடுத்துவரப்பட்டிருந்தது. பின்னர் சேர்வீடு விலக்கில் இருந்து மேளதாளங்கள் முழங்க, வாண வேடிக்கைகளுடன் அரண்மனை சந்தனகருப்பு கோவிலுக்கு புனிதநீர் அடங்கிய குடங்களை பக்தர்கள் ஊர்வலமாக எடுத்து வந்தனர். 

அதன்பிறகு சந்தன கருப்புசாமிக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது. பின்னர் சாமி சிலை செய்வதற்காக சந்தன கருப்புசாமி கோவில் அரண்மனை கிணற்றில் இருந்து பிடிமண் எடுத்துவரப்பட்டது. இதையடுத்து கோவிலில் திருவிழா தொடங்கியது. 

இந்த நிகழ்ச்சிகளில் நத்தம் மற்றும் வேலம்பட்டி, உலுப்பகுடி, சேர்வீடு, கோவில்பட்டி உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். முடிவில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் செய்திருந்தனர். 

மேலும் செய்திகள்