விழுப்புரம் அருகே சுரங்கப்பாதையில் தேங்கியிருந்த மழைநீரில் மூழ்கி 2 சிறுவர்கள் பலி
விழுப்புரம் அருகே சுரங்கப்பாதையில் தேங்கியிருந்த மழைநீரில் மூழ்கி 2 சிறுவர்கள் பலியானார்கள்.
வளவனூர்,
விழுப்புரம் அருகே உள்ள வெள்ளகுளம் சேர்ந்தனூரை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவருடைய மகன் விக்னேஷ்(வயது 8). இவன் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 3-ம் வகுப்பு படித்து வந்தான். பக்கத்துக்கு வீட்டை சேர்ந்தவர் சங்கரமூர்த்தி மகன் தர்ஷன்(5). நேற்று விக்னேஷ் தர்ஷனை சைக்கிளில் ஏற்றிக்கொண்டு விளையாடிக்கொண்டிருந்தான்.
அப்போது சேர்ந்தனூரில் இருந்து தென்குச்சிப்பாளையம் செல்லும் ரெயில்வே சுரங்கப்பாதையில் தேங்கியிருந்த தண்ணீரில் குளிப்பதற்காக சென்றனர். அப்போது தண்ணீரில் இறங்கி குளித்து கொண்டிருந்தபோது, திடீரென அவர்கள் நீரில் மூழ்கி, மூச்சுத்திணறி பலியாகினர்.
பெற்றோர் கதறல்
இதற்கிடையே விளையாடிக்கொண்டிருந்த சிறுவர்கள் நீண்டநேரமாகியும் வீடு திரும்பாததால் பெற்றோர் பல்வேறு இடங்களில் தேடி பார்த்தனர். அப்போது தென்குச்சிப்பாளையம் சுரங்கப்பாதையில் இருவரும் தண்ணீரில் பிணமாக மிதந்தனர்.
சிறுவர்களின் உடல்களை பார்த்து அவர்களது பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். இதுகுறித்து குறித்து வளவனூர் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.