தினத்தந்தி புகார் பெட்டி

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89396 58888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகளை பார்க்கலாம்.

Update: 2021-12-12 16:42 GMT
திண்டுக்கல்: 

குண்டும், குழியுமான சாலை
பழனியில் இருந்து கரிக்காரன்புதூர் செல்லும் சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக மாறியுள்ளது. இந்த நிலையில் நேற்று முன்தினம் அப்பகுதியில் பெய்த மழையால் சாலையில் உள்ள குழிகளில் தண்ணீர் தேங்கி நின்றது. இதனால் குழிகள் தெரியாமல் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கிய சம்பவமும் அரங்கேறியது. எனவே சேதமடைந்த சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-தங்கராஜ், கரிக்காரன்புதூர்.

பஸ் நிலையம் பயன்பாட்டுக்கு வருமா?
நத்தம் தாலுகா செந்துறை புதிய பஸ் நிலையம் அமைக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆகிறது. இதுவரை பயன்பாட்டுக்கு வரவில்லை. இதனால் பயணிகள் வெயிலில் பஸ்சுக்காக காத்திருக்கும் நிலை உள்ளது. எனவே பஸ் நிலையத்தை பயன்பாட்டுக்கு கொண்டுவர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-முருகேசன், செந்துறை.

சாக்கடை கால்வாய் வசதி வேண்டும்
நிலக்கோட்டை தாலுகா மு.வாடிப்பட்டியில் சாக்கடை கால்வாய் வசதி செய்யப்படவில்லை. இதனால் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் தெருக்களில் தேங்கி நிற்கிறது. இதன் காரணமாக சுகாதாரக்கேடு ஏற்பட்டு நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே சாக்கடை கால்வாய் வசதி செய்து தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சோழராஜன், மு.வாடிப்பட்டி.

ஆக்கிரமிப்பின் பிடியில் சாலைகள்
திண்டுக்கல் நகரின் முக்கிய சாலைகள் ஆக்கிரமிப்பின் பிடியில் சிக்கியுள்ளன. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மேலும் புறநகர் பகுதிகளில் உள்ள ஓடைகளும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதை கவனித்து ஆக்கிரமிப்பை அகற்ற முன்வரவேண்டும்.
-மகேஷ், திண்டுக்கல்.

நோய்வாய்ப்படும் மாடுகள்
ஆத்தூர் தாலுகா பாளையங்கோட்டை ஊராட்சி பிரவான்பட்டியில் மாடுகளுக்கு கோமாரி நோய் தொற்று ஏற்பட்டுள்ளது. இவற்றை சிகிச்சைக்காக பக்கத்து ஊர்களுக்கு கொண்டு செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதனால் மற்ற மாடுகளுக்கும் நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே பிரவான்பட்டியில் சிறப்பு மருத்துவ முகாம் நடத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ரமேஷ்குமார், பிரவான்பட்டி.

மேலும் செய்திகள்