35 ஆண்டுகளுக்கு பிறகு பிஏபி உபரிநீர் கோதவாடிகுளம் மதகை எட்டியது
35 ஆண்டுகளுக்கு பிறகு பிஏபி உபரிநீர் கோதவாடிகுளம் மதகை எட்டியது
கிணத்துக்கடவு
35 ஆண்டுகளுக்கு பிறகு கோதவாடிகுளம் மதகை பி.ஏ.பி. உபரிநீர் எட்டியதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
கோதவாடி குளம்
கிணத்துக்கடவு அருகே உள்ள கோதவாடிகுளத்திற்கு அண்மையில் பெய்த மழையால் சிறிதளவுகூட தண்ணீர் வரவில்லை. குளத்தில் தண்ணீர் தேங்கினால் குளத்தின் அருகில் விவசாய பணிகளும், குளத்தை சுற்றியுள்ள 20-க்கும் மேற்ப்பட்ட கிராமங்களில் குடிநீர் பிரச்சினையும் தீரும். புதர்மண்டி கிடந்த இந்த குளத்தை சீரமைக்க கோதவாடிகுளம் பாதுகாப்பு அமைப்பு மற்றும் தனியார் நிறுவனங்கள், குளம் அருகில் இருக்கும் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர்.
இந்த நிலையில் கோதவாடி குளத்திற்கு பி.ஏ.பி. வாய்க்காலில் இருந்து உபரி தண்ணீர் திருப்பி விட தமிழகஅரசு, பொதுப்பணித்துறை முடிவு செய்தது.
2 மதகுகளையும் எட்டியது
அதன்படி கடந்த நவம்பர் மாதம் 11-ந்தேதி முதல் மெட்டுவாவி வழியாகவும், செட்டியக்காபாளையம் கிளை வாய்க்கால் வழியாகவும் பிஏபி வாய்க்கால் உபரி தண்ணீர் கோதவாடி குளத்திற்கு திறந்து விடப்பட்டது. மெட்டுவாவி வழியாக கோதவாடி குளத்திற்க்கு வரும் பிஏபி தண்ணீர் அந்த பகுதியில் உள்ள 17 குட்டைகளில் நிரம்பியதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.மேலும 11.74 மில்லியன் கன அடி தண்ணீரை தேக்கி வைக்க கூடிய கோதவாடிகுளத்திற்கு தற்போது தொடர்ந்து ஒரு மாதத்திற்கு மேல் பிஏபி உபரிநீர் வந்துகொண்டிருப்பதால் குளத்தில் 75 சதவீத தண்ணீர் தேங்கியுள்ளது. உபரிநீர் கோதவாடி குளத்தில் உள்ள 2 மதகுகளையும் எட்டியுள்ளது.
கண்காணிப்பு
இதனால் கோதவாடி குளத்தை சுற்றியுள்ள ஏராளமான விவசாயிகள், பொதுமக்கள், தன்னார்வலர்கள் மகிழ்ச்சி அடைந்ததோடு, குளத்தில் தேங்கியுள்ள தண்ணீரை பார்த்து ரசித்து செல்கின்றனர். இதுகுறித்து பொதுப்பணித் துறை அதிகாரிகள் கூறியதாவது:- அரசு உத்தரவின் பேரில் கோதவாடி குளம் தற்போது பி.ஏ.பி உபரி தண்ணீர் மூலம் நிரப்பும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதனால் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக கோதவாடி குளத்திற்கு தண்ணீர் வந்த வண்ணம் உள்ளது. 35 ஆண்டுகளுக்கு பிறகு கோதவாடி குளத்தில் 2 மதகு பகுதியை தண்ணீர் எட்டியுள்ளது. தினசரி கோதவாடி குளத்தில் தண்ணீர் எந்த அளவில் தேங்கி உள்ளது என்பதை கண்காணித்து வருகிறோம் என்றனர்.