சுல்தான்பேட்டையில் 10 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு

சுல்தான்பேட்டையில் 10 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு

Update: 2021-12-12 16:15 GMT
சுல்தான்பேட்டை

சுல்தான்பேட்டையில் 10 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு எதிரொலியாக வீதி, வீதியாக கொசு மருந்து அடிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

10 பேருக்கு டெங்கு

சுல்தான்பேட்டை ஒன்றியத்தில் வதம்பச்சேரி, வாரப்பட்டி, செஞ்சேரி புத்தூர், குமாரபாளையம், கள்ளப்பாளையம், அப்பநாயக்கன்பட்டி, பாப்பம்பட்டி உள்பட மொத்தம் 20 ஊராட்சிகள் உள்ளன. இவைகளில், டெங்கு காய்ச்சல் பரவலை தடுக்க வட்டார சுகாதார துறையினர் கடந்த சில வாரங்களாக தீவிர நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர். இருப்பினும், ஒன்றியத்தில் 3 பள்ளி மாணவர்கள் உள்பட 10 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டு கோவையில் சிசிச்சை பெற்று வருகின்றனர். 
இதனையடுத்து, மேலும் கிராமங்களில் டெங்கு பரவாமல் தடுக்க ஒன்றிய அதிகாரிகள் சாய்ராஜ் சுப்பிரமணியம், அந்தோணி ஆரோக்கிய செல்வன், வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் வனிதா உத்தரவின்பேரில் தற்போது, ஊராட்சி நிர்வாகங்கள் தங்கள் பகுதியில் டெங்கு உள்ளிட்ட மழைக்கால நோய்கள் பொதுமக்களிடம் பரவாமல் தடுக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

கொசு மருந்து அடிக்கும் பணி

அதன்படி வீதி வீதியாக சென்று கொசு மருந்து அடித்தல், மக்கள் அடர்த்தியாக வசிக்கும் சில இடங்களில் வீடு வீடாக சென்றும் கொசு மருந்து அடிக்கும் பணி நடக்கிறது. மேலும், அரசின் நடமாடும் மருத்துவ வாகனம் மூலம் காய்ச்சல் பரிசோதனை செய்யப்பட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய மருந்து, மாத்திரைகள் வழங்கப்பட்டு தக்க ஆலோசனைகளும் வழங்கப்படுகிறது. மேலும், தேவையற்ற பாத்திரங்கள், டயர்கள், ஆட்டு உரல்கள் ஆகியவற்றில் தேங்கி உள்ள மழைநீர் அகற்றும் பணியிலும் சுகாதார பணியாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு உள்ளார்கள். 

மேலும் செய்திகள்