திருவள்ளூர் மாவட்டத்தில் லோக் அதாலத்தில் 5 ஆயிரம் வழக்குகள் முடித்து வைப்பு
திருவள்ளூர் மாவட்டத்தில் லோக் அதாலத்தில் 6 ஆயிரம் வழக்குகளில் 5 ஆயிரம் வழக்குகள் முடித்து வைக்கப்பட்டு ரூ.47½ கோடிக்கு தீர்வு கிடைத்தது.
லோக் அதாலத்
திருவள்ளூரில் உள்ள மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நேற்று தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு உத்தரவின்பேரில் தேசிய மக்கள் நீதிமன்றம் (லோக் அதாலத்) நடைபெற்றது. இந்த லோக் அதாலத்திற்கு மாவட்ட முதன்மை நீதிபதி செல்வ சுந்தரி தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்.
மகளிர் நீதிமன்ற மாவட்ட நீதிபதி சுபத்ரா தேவி, மாவட்ட நிரந்தர லோக் அதாலத் தலைவர் சரஸ்வதி, முதலாவது கூடுதல் மாவட்ட நீதிபதி வித்யா, குடும்பநல நீதித்துறை நீதிபதி ரவி, மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் உமா, குற்றவியல் நீதிமன்ற நீதிபதி கூடுதல் மாவட்ட முன்சீப் நீதிபதி ஸ்டார்லி, குற்றவியல் நீதிமன்ற நீதித்துறை நடுவர்கள் ராதிகா, கமலா மற்றும் திரளான வக்கீல்கள், வங்கி அலுவலர்கள், கோர்ட்டு ஊழியர்கள் மற்றும் திரளான பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
5 ஆயிரம் வழக்குகள் தீர்வு
இந்த லோக் அதாலத்தில் கோர்ட்டில் நிலுவையில் உள்ள உரிமையியல் வழக்குகள், மோட்டார் வாகன விபத்து வழக்குகள், குடும்ப நல வழக்குகள், காசோலை வழக்குகள், குற்றவியல் வழக்குகள் மற்றும் நிலுவையில் அல்லாத வங்கி வழக்குகள் சமரசம் பேசி முடிக்கப்பட்டது.
அதேபோல பூந்தமல்லி, பொன்னேரி, திருத்தணி, அம்பத்தூர், திருவொற்றியூர், பள்ளிப்பட்டு, ஊத்துக்கோட்டை, கும்மிடிப்பூண்டி, மாதவரம் போன்ற பகுதிகளில் உள்ள தாலுகா கோர்ட்டுகளிலும் மெகா லோக் அதாலத் நடைபெற்றது.
அதேபோல திருவள்ளூர் மாவட்டத்தில் மொத்தம் 6 ஆயிரத்து 352 வழக்குகள் சமரச தீர்வு எடுக்கப்பட்டு அவற்றில் 4,986 வழக்குகள் முடிக்கப்பட்டு, ரூ.47 கோடியே 48 லட்சத்து 33 ஆயிரத்து 387 தீர்வு காணப்பட்டது. பின்னர் திருவள்ளூர் மாவட்ட முதன்மை நீதிபதி செல்வ சுந்தரி பயனாளிகளுக்கு தீர்வுத் தொகைக்கான காசோலைகளை வழங்கினார்.
திருத்தணி
திருத்தணி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் திருவள்ளூர் மாவட்ட நீதிமன்ற வழிகாட்டுதலின்படி நாடு தழுவிய மக்கள் நீதிமன்றம் (லோக் அதாலத்) நிகழ்வு நடைபெற்றது, இதில் 262 வழக்குகள் சமரச தீர்வு காணப்பட்டது., மொத்தமாக ரூ.1 கோடியே 74 லட்சம் தீர்வு காணப்பட்டது. இந்த நிகழ்ச்சியில், பொறுப்பு சார்பு நீதிபதி மற்றும் வட்ட சட்ட பணிகள் குழு தலைவர் அருந்ததி, குற்றவியல் நடுவர் லோகநாதன், மாவட்ட உரிமையியல் நீதிபதி கவிப்பிரியா கலந்து கொண்டனர்.