வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நலத்திட்ட உதவிகள்; அமைச்சர் நாசர் வழங்கினார்
திருவள்ளூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழையின் காரணமாக மழையால் பாதிக்கப்பட்ட 1,000 குடும்பங்களுக்கு நிவாரண உதவி வழங்கும் நிகழ்ச்சி திருவள்ளூரில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தலைமை தாங்கினார். இதில் சிறப்பு அழைப்பாளராக பால்வளத்துறை அமைச்சரும், தி.மு.க.வின் திருவள்ளூர் மத்திய மாவட்ட பொறுப்பாளருமான நாசர் கலந்துகொண்டு மழை வெள்ளம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரிசி, பருப்பு, உப்பு, சர்க்கரை, மாவு உள்ளிட்ட மளிகைப்பொருட்களின் தொகுப்புகளை வழங்கினார்.
அவருடன் திருவள்ளூர் எம்.எல்.ஏ., வி.ஜி.ராஜேந்திரன், தி.மு.க.வின் திருவள்ளூர் மாவட்ட பொறுப்பாளர் திருத்தணி எம்.பூபதி, திருவள்ளூர் ஒன்றிய குழு தலைவர் ஜெயசீலி ஜெயபாலன், திருவள்ளூர் நகர செயலாளர் ரவிச்சந்திரன், மாவட்ட இளைஞரணி செயலாளர் பூண்டி மோதிலால் உள்பட அரசு அலுவலர்கள் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.