தமிழகத்தில் இதுவரை 1 கோடி பேர் முதல் தவணை தடுப்பூசி செலுத்தவில்லை: டாக்டர் ராதாகிருஷ்ணன்

தமிழகத்தில் சுமார் 1 கோடி பேர் இதுவரை முதல் தவணை தடுப்பூசி கூட செலுத்தவில்லை என டாக்டர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

Update: 2021-12-12 15:09 GMT
கொரோனா தடுப்பூசி முகாம்

தமிழக முதல்-அமைச்சரின் ஆணைக்கிணங்க நேற்று திருவள்ளூரை அடுத்த 26 வேப்பம்பட்டு ஊராட்சியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் 14-வது மாபெரும் கொரோனா தடுப்பூசி போடும் சிறப்பு முகாம் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் கலந்துகொண்டு தடுப்பூசி போடும் பணியை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது அங்கு தடுப்பூசி போடவந்த பொதுமக்களிடம் தடுப்பூசி போடுவதால் ஏற்படும் நன்மைகள் குறித்து எடுத்துக்கூறினார்.

அதைத்தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

திருவள்ளூர் மாவட்டத்தில் இதுவரை 81.4 சதவீதம் பேர் முதல் தவணையும், 47.3 சதவீதம் பேர் 2-வது தவணை தடுப்பூசியும் போட்டு உள்ளனர்.

81 சதவீத மக்கள்

தமிழ்நாட்டில் இதுவரை 5.78 கோடி மக்கள் 18 வயதிற்கு மேற்பட்டோர் உள்ளார்கள். அவர்களில் 4.73 கோடி மக்கள் முதல் தவணை தடுப்பூசியும், 2.83 கோடி மக்கள் 2-வது தவணை தடுப்பூசி செலுத்திக்கொண்டு உள்ளனர்.

ஆக மொத்தம் 81 சதவீத மக்கள் முதல் தவணை தடுப்பூசியும், 49 சதவீத மக்கள் 2-வது தவணை தடுப்பூசியும் செலுத்திக்கொண்டு உள்ளனர். 18 வயதிற்கு மேற்பட்ட சுமார் 1.08 கோடி நபர்கள் முதல் தவணை தடுப்பூசி செலுத்த வேண்டி உள்ளது.

94 லட்சம் நபர்கள் 2-வது தவணை தடுப்பூசி செலுத்த வேண்டி உள்ளது. மேலும் இரண்டாவது தவணை தடுப்பூசி தடுப்பு ஊசி செலுத்தி கொள்ளாதவர்கள் தாமாக முன்வந்து தடுப்பூசியை செலுத்திக்கொள்ள வேண்டும்.

ரஷியா, ஜெர்மனி, இங்கிலாந்து போன்ற பல்வேறு நாடுகளில் டெல்டா வைரசின் தாக்கம் மிக அதிகமாக உள்ளது.

ஒமைக்ரான்

ஒமைக்ரான் 50-க்கும் மேற்பட்ட நாடுகளில் 50 உருமாற்றங்களுடன் உள்ளது. ஆனால் தமிழ்நாட்டில் இதுவரை ஓமைக்ரான் பாதிப்பு இல்லை.

இது ஒரு நல்ல விஷயமாக கருதப்படுகிறது. ஆனால் சென்னையில் 65 சதவீத மக்கள் முக கவசம் அணியாமல் சுற்றித்திரிவது மிகவும் வேதனை அளிக்கிறது.

இது அச்சம் தரக்கூடிய செய்தியாகும். தமிழகத்தில் தொற்று குறைந்து வருகிறது என பொதுமக்கள் அலட்சியம் காட்டாமல் அனைவரும் பொது இடங்களில் வரும்போது கண்டிப்பாக முக கவசம் அணிந்து, சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும்.

தமிழகத்தில் ஓமைக்ரான் குறித்து வதந்திகள் பரவி வருகிறது. இதனை யாரும் நம்ப வேண்டாம். தமிழகத்தில் இதுவரை கொரோனா வைரஸ் விதிமுறைகளை மீறியதாக 47 லட்சம் பேருக்கு ரூ.101 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

ஒத்துழைப்பு

தமிழகத்தில் தடுப்பூசி போதிய அளவில் இருப்பில் உள்ளது. தமிழக அரசின் வழிமுறைகளை அனைவரும் பின்பற்றி தடுப்பூசி செலுத்திக்கொள்ள ஒத்துழைப்பு தரவேண்டும் என அவர் தெரிவித்தார்.

இந்த ஆய்வின்போது திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ், சுகாதார பணிகள் துணை இயக்குனர் டாக்டர் ஜவஹர் லால், வட்டார வளர்ச்சி அலுவலர் வெங்கடேசன், வேப்பம்பட்டு ஊராட்சி மன்ற தலைவர் சதா பாஸ்கரன், டாக்டர்கள், செவிலியர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்