தொட்டபெட்டா சாலையை விரைவில் சீரமைக்க வேண்டும்

தொட்டபெட்டா சாலையை விரைவில் சீரமைக்க வேண்டும்

Update: 2021-12-12 15:05 GMT
ஊட்டி

தொட்டபெட்டா விரைவில் சாலையை சீரமைத்து சுற்றுலா பயணிகள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்று கலெக்டர் அறிவுறுத்தினார்.

கலெக்டர் ஆய்வு

நீலகிரி மாவட்டம் ஊட்டி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட உல்லத்தி, தொட்டபெட்டா ஊராட்சி பகுதிகளில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை சார்பில் முடிக்கப்பட்ட, நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் எஸ்.பி.அம்ரித் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். 

உல்லத்தி ஊராட்சிக்கு உட்பட்ட கவரட்டி முதல் கல்லட்டி வரை 14-வது நிதி குழு திட்டத்தின் கீழ் முடிக்கப்பட்ட சாலை பணி, ஜல்ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ் ரூ.20.18 லட்சம் மதிப்பில் கவரட்டி குடியிருப்பு பகுதியில் 101 வீடுகளுக்கு குழாய் மூலம் குடிநீர் வழங்கும் பணி மற்றும் தரைமட்ட நீர்தேக்க தொட்டியையும் அவர் பார்வையிட்டார்.

தொட்டபெட்டா சாலை 

தொடர்ந்து அம்மநாடு பகுதியில் பழங்குடியினர்களுக்கான பசுமை வீடுகள் கட்டும் திட்டத்தின் கீழ் தலா ரூ.3 லட்சத்தில் கட்டப்பட்டு வரும் 2 வீடுகள், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் டேங்மேடு பகுதியில் ரூ.3.37 லட்சத்தில் கட்டப்பட்டு வரும் கால்நடை கொட்டகையை கலெக்டர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். 

அத்துடன் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பணிகளை விரைந்து முடிக்க அறிவுரை வழங்கினார். மேலும் தொட்டபெட்டா ஊராட்சிக்கு உட்பட்ட தொட்டபெட்டா காட்சிமுனைக்கு (உயர்ந்த மலை சிகரம்) செல்லும் சாலை மழையால் பழுதடைந்ததால் ரூ.15 லட்சத்தில் தடுப்பு சுவர் அமைத்து சீரமைக்கும் பணிகளை கலெக்டர் எஸ்.பி.அம்ரித் ஆய்வு செய்தார்.

விரைந்து முடிக்க வேண்டும்

இந்த பணியை விரைந்து முடித்து சுற்றுலா பயணிகள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்று சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் அறிவுறுத்தினார். ஆய்வின் போது மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஜெயராமன், செயற்பொறியாளர் சுஜாதா மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் உட்பட பலர் உடன் இருந்தனர்.

மேலும் செய்திகள்