நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் கவர்னர் ஆர்என் ரவி இன்று முதல் 3 நாட்கள் சுற்றுப்பயணம்
நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் தமிழக கவர்னர் ஆர்என் ரவி இன்று முதல் 3 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.
தூத்துக்குடி:
நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி இன்று (திங்கட்கிழமை) முதல் 3 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பங்கேற்கிறார்.
கவர்னர்
தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி, தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களில் இன்று (திங்கட்கிழமை) முதல் 3 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்.
இதற்காக அவர் இன்று காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் புறப்பட்டு தூத்துக்குடிக்கு காலை 11 மணிக்கு வருகிறார். தொடர்ந்து அவர் எட்டயபுரம் பாரதியார் மணிமண்டபத்துக்கு சென்று, பாரதியார் உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார். பின்னர் பாரதியார் பிறந்த இல்லத்துக்கு சென்று பார்வையிடுகிறார். மதியம் 2 மணிக்கு தூத்துக்குடி அரசு விருந்தினர் மாளிகைக்கு வருகிறார். அங்கு மதிய உணவை முடித்துவிட்டு சிறிது நேரம் ஓய்வெடுக்கிறார்.
மாலை 3 மணி முதல் 4 மணி வரை விருந்தினர் மாளிகையில் வைத்து மாவட்ட கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு, மாநகராட்சி ஆணையாளர் மற்றும் முன்னாள் ராணுவத்தினருடன் கலந்துரையாடுகிறார். மாலை 4.30 மணிக்கு தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தை சுற்றி பார்க்கிறார். பின்னர் தூத்துக்குடியில் இருந்து திருச்செந்தூர் செல்கிறார். இரவு அங்குள்ள விருந்தினர் மாளிகையில் தங்குகிறார்.
நாளை
நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 6 மணி முதல் 7 மணி வரை திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தரிசனம் செய்கிறார். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு நெல்லை மாவட்டம் மகேந்திரகிரியில் உள்ள இஸ்ரோ மையத்துக்கு வருகிறார். மதியம் 1 மணி வரை இஸ்ரோ மையத்தை பார்வையிடுகிறார்.
அதன்பிறகு நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்துக்கு வருகிறார். அங்கு மாலை 3 மணி முதல் 4.30 மணி வரை முன்னாள் ராணுவத்தினர் மற்றும் தேசிய மாணவர் படை மாணவர்களுடன் கலந்துரையாடுகிறார். மாலை 4 மணி முதல் 6.30 மணி வரை பல்கலைக்கழக துணைவேந்தர், பல்கலைக்கழக பணிகள் குறித்து கவர்னருக்கு எடுத்துக்கூறுகிறார். மேலும் பல்கலைக்கழக சிண்டிகேட் உறுப்பினர்கள், கல்லூரி முதல்வர்களுடன் கலந்துரையாடுகிறார். இரவில் நெல்லையில் தங்குகிறார்.
பட்டமளிப்பு விழா
நாளை மறுநாள் (புதன்கிழமை) காலை 7.30 மணி முதல் 8.30 மணி வரை நெல்லையப்பர் சுவாமி கோவிலில் தரிசனம் செய்கிறார். தொடர்ந்து காலை 10.30 மணி முதல் பகல் 1.30 மணி வரை நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பங்கேற்கிறார்.
மதியம் 2.30 மணிக்கு நெல்லையில் இருந்து மதுரைக்கு புறப்பட்டு செல்கிறார். 16-ந் தேதி காலை மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் சுவாமி தரிசனம் செய்கிறார். மதுரை காமராஜர் பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெறும் அன்னை தெரசா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பங்கேற்கிறார். கவர்னர் ஆர்.என்.ரவி வருகையையொட்டி நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.