மாமல்லபுரம் புராதான சின்னங்கள் வளாகத்தில் நடைபாதை ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்

மாமல்லபுரம் புராதன சின்ன வளாகத்தில் அமைக்கப்பட்ட 20-க்கும் மேற்பட்ட நடைபாதை கடைகள் அகற்றப்பட்டதால் பேரூராட்சி அதிகாரிகளுடன் வியாபாரிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

Update: 2021-12-12 13:14 GMT
நடைபாதை கடைகள்

செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் அர்ச்சுனன் தபசு, வெண்ணை உருண்டை பாறை, கடற்கரை கோவில் உள்ளிட்ட புராதன சின்னங்கள் உள்ளது. இதை காண ஏராளமான சுற்றுலா பயணிகள் நாள்தோறும் வந்து செல்கின்றனர்.

இந்த நிலையில் அர்ச்சுனன் தபசு வளாகத்தில் பேரூராட்சி அனுமதியின்றி சுற்றுலா பயணிகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் நடைபாதைகளை ஆக்கிரமித்து 20-க்கும் மேற்பட்ட நடைபாதை கடைகளை அமைக்கப்பட்டு இருந்தன. இந்த ஆக்கிரமிப்பு குறித்த புகார்கள் மாவட்ட நிர்வாகத்துக்கு வந்த வண்ணம் இருந்தன.

இந்த நிலையில் நடைபாதை கடைகளை அகற்ற செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் மாமல்லபுரம் பேரூராட்சி மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

கடைகள் அகற்றம்

இதையடுத்து நேற்று மாமல்லபுரம் பேரூராட்சி செயல் அலுவலர் கணேசன், மாமல்லபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிமாறன் ஆகியோர் தலைமையில் மாமல்லபுரம் பேரூராட்சி துப்புரவு ஆய்வாளர் ரகுபதி, பேரூராட்சி துப்புரவு மேற்பார்வையாளர் தாமோதரன், மாமல்லபுரம் வருவாய் அலுவலர் ரகு, மாமல்லபுரம் கிராம நிர்வாக அலுவலர் நரேஷ்குமார் உள்ளிட்ட வருவாய்த்துறை, பேரூராட்சி துறை அதிகாரிகள் போலீசார் உதவியுடன் நடைபாதை கடைகளை அகற்றி கொண்டிருந்தனர். அப்போது இதற்கு எதிர்ப்பு தெரிவித்த நடைபாதை வியாபாரிகள் கொரோனாவால் கடந்த 2 ஆண்டுகளாக தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டநிலையில் தற்போதுதான் மீண்டு வந்துள்ளதாகவும், ஆதலால் கடைகளை அகற்ற கூடாது என்றும் முறையிட்டனர்.

மேலும், கடைகள் வைக்க மாற்று இடம் தங்களுக்கு அமைத்து தராதவரை கடைகளை அகற்ற கூடாது என எதிர்ப்பு தெரிவித்து நடைபாதை வியாபாரிகள், அதிகாரிகள் மற்றும் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

தள்ளு, முள்ளு

மேலும், நடைபாதை கடைகளை அகற்ற முற்பட்ட பேரூராட்சி துப்புரவு பணியாளர்களை சிலர் தடுத்ததால் வியாபாரிகளுக்கும், துப்புரவு பணியாளர்களுக்கும் தள்ளு, முள்ளு ஏற்பட்டது.

பிறகு சிலர் தங்கள் கடைகளை தாங்களே அகற்றி கொள்வதாக கூறியதையடுத்து, அங்கு கடைகளில் இருந்த வியாபார பொருட்களை தங்கள் வீடுகளுக்கு எடுத்து சென்றனர்.

இதற்கடையில் அரசின் உத்தரவை மீறி மீண்டும் அர்ச்சுனன் தபசு வளாகத்தில் கடைகள் அமைப்பவர்கள் மீது பேரூராட்சி மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகளிடம் இருந்து புகார் பெறப்பட்டு வழக்கு பதிவு செய்யப்படும் என்று போலீசார் தெரிவித்தனர்.

மாமல்லபுரம் அர்ச்சுனன் தபசு பகுதி ஆக்கிரமிப்பு கடைகள் திடீரென அகற்றப்பட்டதால் நேற்று பரபரப்பாக காணப்பட்டது.

மேலும் செய்திகள்