பள்ளிக்கரணையில் தறிகெட்டு ஓடிய தண்ணீர் லாரி மோதி என்ஜினீயர் பலி

பள்ளிக்கரணையில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தறிகெட்டு ஓடிய தண்ணீர் லாரி கார், 2 மோட்டார்சைக்கிள்கள் மீது மோதியது. இதில் கம்ப்யூட்டர் என்ஜினீயர் பலியானார். மற்றொருவருக்கு கால் முறிந்தது.

Update: 2021-12-12 10:31 GMT
கம்ப்யூட்டர் என்ஜினீயர்

விழுப்புரம் மாவட்டம் வளத்தி கிராமம் அரசமர தெருவைச் சேர்ந்தவர் கோபால் (வயது 33). கம்ப்யூட்டர் என்ஜினீயரான இவர், சென்னையை அடுத்த மேடவாக்கத்தில் தனது நண்பர்களுடன் தங்கி, தனியார் கம்ப்யூட்டர் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார்.

நேற்று வழக்கம்போல் வேலைக்கு செல்வதற்காக தனது மோட்டார் சைக்கிளில் பள்ளிக்கரணை மேம்பாலம் அருகே ரேடியல் சாலையில் துரைப்பாக்கம் நோக்கி சென்றார்.

தறிகெட்டு ஓடிய லாரி

அப்போது குரோம்பேட்டையில் இருந்து ரேடியல் சாலை வழியாக துரைப்பாக்கம் நோக்கி அவருக்கு பின்னால் வந்த தண்ணீர் லாரி, திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தறிகெட்டு ஓடி முன்னால் சென்று கொண்டிருந்த ஒரு கார் மீது மோதியதுடன், கம்ப்யூட்டர் என்ஜினீயர் கோபால் மற்றும் பள்ளிக்கரணையை சேர்ந்த கணேசன் (34) ஆகியோரின் மோட்டார்சைக்கிள்கள் மீதும் மோதியது.

அதே வேகத்தில் தொடர்ந்து தறிகெட்டு ஓடிய தண்ணீர் லாரி, சாலை தடுப்பு சுவரில் மோதி நின்றது. தண்ணீர் லாரி மோதியதில் படுகாயம் அடைந்த என்ஜினீயர் கோபால், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். கணேசனுக்கு கால் முறிந்து மயங்கி கிடந்தார். இதைப்பார்த்த பொதுமக்கள் உடனடியாக அவரை அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.

டிரைவர் கைது

இதுகுறித்து சென்னை தெற்கு போக்குவரத்து உதவி கமிஷனர் குமாரவேல் உத்தரவின் பேரில் பரங்கிமலை போக்குவரத்து புலனாய்வு பிரிவு இன்ஸ்பெக்டர் பழனி, சப்-இன்ஸ்பெக்டர் மீனாட்சி சுந்தரம் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பலியான என்ஜினீயர் கோபால் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தண்ணீர் லாரி டிரைவரான திருவாரூர் மாவட்டம் வடபாதி மங்களத்தை சேர்ந்த பூவரசன் (25) என்பவரை கைது செய்து விசாரித்து வருகிறார்கள்.

மேலும் செய்திகள்