‘தினத்தந்தி‘ புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 99626 78888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-;
புகார் பெட்டி எதிரொலி; அதிகாரி ஆய்வு
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி வட்டம் திருவாலங்காடு ஒன்றியம் பெரியகளக்காட்டூர் கிராமத்தில் உள்ள அரசு ஆதிதிராவிட நல உயர்நிலைப்பள்ளியின் நுழைவுவாயில் இடிந்து சேதம் அடைந்திருப்பது பற்றி ‘தினத்தந்தி’ புகார் பெட்டியில் படத்துடன் செய்தி வெளியானது. இதையடுத்து இந்த பள்ளி கட்டிடத்தை ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாவட்ட அலுவலர் சரவணன் நேரில் ஆய்வு செய்தார். அவர், ஒரு வாரத்துக்குள் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்ததாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
விபத்தை ஏற்படுத்திய பள்ளம் மூடல்
சென்னை ஓ.எம்.ஆர். சத்தியமூர்த்தி சாலை லட்சுமணன் நகர் (185 வார்டு) சாலையில் குடிநீர் வாரிய பணிகளுக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் சிக்கி வாகன ஓட்டி ஒருவர் கீழே விழுந்தது படத்துடன் ‘தினத்தந்தி’ புகார் பெட்டியில் சுட்டிக்காட்டப்பட்டது. இதையடுத்து விபத்தை ஏற்படுத்திய அந்த பள்ளம் உடனடியாக மூடப்பட்டுள்ளது.
குடிநீர் வாரியம் உடனடி களப்பணி
சென்னை மணலி புதுநகர் 53-வது பிளாக் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் குடிநீரில் கழிவுநீர் கலந்து வருவது குறித்த அப்பகுதி மக்களின் மனக்குமுறல் ‘தினத்தந்தி’ புகார் பெட்டியில் வெளியானது. இதையடுத்து அப்பகுதி மக்களுக்கு குடிநீர் லாரி மூலம் தண்ணீர் சப்ளை செய்யப்பட்டது. குடிநீர் வாரிய உதவி என்ஜினீயர் இப்பகுதியில் ஆய்வு செய்தார். தற்போது இப்பிரச்சினைக்கு தீர்வு கிடைத்துள்ளதாக அப்பகுதி மக்கள் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர்.
பூங்கா மீண்டும் திறப்பு; சிறுவர்கள் குதூகலம்
சென்னை திருவான்மியூர் 182-வது வார்டுக்குட்பட்ட குறிஞ்சி குடியிருப்பு பகுதியில் கொரோனா ஊரடங்கு அறிவிக்கப்பட்ட போது மூடப்பட்ட மாநகராட்சி சிறுவர் விளையாட்டு பூங்கா எப்போது திறக்கப்படும்? என்று ‘தினத்தந்தி’ புகார் பெட்டியில் படத்துடன் செய்தி வெளியானது. உடனடியாக மாநகராட்சி நிர்வாகம், பூங்காவை தூய்மைப்படுத்தி திறந்துள்ளது. இதனால் அப்பகுதியை சேர்ந்த சிறுவர்கள் குதூகலம் அடைந்துள்ளனர். நடவடிக்கை எடுத்த மாநகராட்சிக்கும், உறுதுணையாக இருந்த ‘தினத்தந்தி’க்கும் அப்பகுதி மக்கள் மனதார நன்றி தெரிவித்துள்ளனர்.
மழைநீர் வடிகால் மூடி சேதம்
சென்னை கொளத்தூர்-செங்குன்றம் சாலையில் உள்ள பிரபல தனியார் பள்ளி அருகே 2 இடங்களில் மழைநீர் வடிகால் மூடி சேதம் அடைந்துள்ளது. இது நடந்து செல்வோர்களின் கால்களை பதம் பார்க்கும் வகையிலும், வாகனத்தில் செல்பவர்கள் தடுமாறும் வகையிலும் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கிறோம்.
- எஸ்.யோகலிங்கம், கொளத்தூர்.
மக்களை அச்சுறுத்தும் மின்சார பெட்டி
ஆவடி மாநகராட்சிக்குட்பட்ட 18-வது வார்டு வீட்டுவசதி வாரியம் 28-வது தெருவில் உள்ள தனியார் ஆஸ்பத்திரி வாசலில் தெரு மின்விளக்குகளை இயக்கும் மின்சார சுவிட்ச் பெட்டி உயரம் குறைந்த நிலையில் உள்ளது. மேலும் மூடியில்லாமல் திறந்தநிலையில் மக்களை அச்சுறுத்தும் வகையில் இருக்கிறது. எனவே மின்வாரிய அதிகாரிகள் உடனடியாக கள ஆய்வு செய்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
- சமூக ஆர்வலர் ஏ.தரணிதரன், ஆவடி.
குப்பை கொட்டினால் அபராதம் விதிக்கப்படுமா?
திருநின்றவூர் 8-வது வார்டு கிருஷ்ணன் கோவில் தெருவில் உள்ள தனியார் திருமண மாளிகை அருகே குப்பைகள் கொட்டக் கூடாது என்று பேரூராட்சி சார்பில் எச்சரிக்கை பேனர் வைக்கப்பட்டுள்ளது. ஆனாலும் இந்த உத்தரவை மதிக்காமல் இப்பகுதியை சேர்ந்த 2 வாடகை வீட்டுதாரர்கள் தினமும் அங்கு குப்பைகளை கொட்டி வருகிறார்கள். பேரூராட்சி நிர்வாகம் குப்பை கொட்டுபவர்களிடம் அபராதம் வசூலித்து, இப்பகுதியை தூய்மை செய்துதர வேண்டும்.
- டி.உமாபதி, திருநின்றவூர்.
ரெயில்நிலையம் அருகே கழிவுநீர் தேக்கம்
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள செவ்வாப்பேட்டை ரெயில் நிலையம் அருகே கழிவுநீர் தெப்பம் போல் தேங்கி உள்ளது. இதனால் இந்த வழியை மிகுந்த சிரமத்துடன் கடக்கும் நிலை உள்ளது. மேலும் ரெயில் நிலையத்துக்கு வரும் பயணிகளின் ஆரோக்கியத்துக்கும் அச்சுறுத்தலாக அமைந்துள்ளது. எனவே இப்பகுதியில் தேங்கி உள்ள கழிவுநீரை அகற்றிட சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- பயணிகள்.
ஆமை வேகத்தில் சாலை விரிவாக்க பணி
செங்கல்பட்டு மாவட்டம் சோழிங்கநல்லூர் தொகுதி வேங்கைவாசல் முதல் சந்தோஷபுரம் நெடுஞ்சாலையில் 3 கி.மீ. தூரம் சாலை விரிவாக்கம் செய்கிறோம் என்று கூறி மண் எடுப்பதும், கல் போடுவதும் என்று 3 ஆண்டுகள் ஓடிபோய் விட்டது. ஆனால் சாலை விரிவாக்கம் மட்டும் செய்யப்படவில்லை. ஆமை வேகத்தில் நடைபெறும் பணி எப்போது விறுவிறுப்பு அடையும்?.
-வேங்கைவாசல் பொதுமக்கள்.
பாழடைந்த அரசு கட்டிடம் புத்துயிர் பெறுமா?
செங்கல்பட்டு மாவட்டம் பெருங்களத்தூர் பேரூராட்சிக்குட்பட்ட 10-வது வார்டு ஸ்டாலின் சாலையில் உள்ள நாய்கள் காப்பகம் பல ஆண்டுகளாக உபயோகப்படுத்தப்படாமல் உள்ளது. தற்போது இந்த கட்டிடம் இரவு நேரங்களில் சமூக விரோதிகளின் புகலிடம் போன்று மாறி உள்ளது. மக்கள் வரி பணம் வீணாகி விடக்கூடாது. எனவே இந்த கட்டிடத்தை சீரமைத்து சுகாதார நிலையம் அமைத்து தந்தால் பயன் உள்ளதாக இருக்கும்.
-சமூக ஆர்வலர் சண்முகநாதன், பெருங்களத்தூர்.