சேலத்தில் வீரபாண்டி ஆ.ராஜா உருவப்படம் திறப்பு-மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
சேலத்தில் வீரபாண்டி ஆ.ராஜா உருவப்படத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
சேலம்:
சேலத்தில் வீரபாண்டி ஆ.ராஜா உருவப்படத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
வீரபாண்டி ஆ.ராஜா உருவப்படம்
சேலம் 5 ரோட்டில் உள்ள ரத்தினவேல் ஜெயக்குமார் திருமண மண்டபத்தில் நேற்று முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தின் மகனும், தி.மு.க. தேர்தல் பணிக்குழு செயலாளருமான வீரபாண்டி ஆ.ராஜாவின் உருவப்படம் திறப்பு விழா நடந்தது. இதற்கு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு தலைமை தாங்கினார்.
அமைச்சர்கள் பொன்முடி, எ.வ.வேலு, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், மதிவேந்தன், கயல்விழி செல்வராஜ், எம்.பி.க்கள் எஸ்.ஆர்.பார்த்திபன், பொன்கவுதமசிகாமணி, ராஜேஷ்குமார் மற்றும் சேலம் மத்திய மாவட்ட தி.மு.க. செயலாளர் வக்கீல் ராஜேந்திரன் எம்.எல்.ஏ., மேற்கு மாவட்ட பொறுப்பாளர் டி.எம்.செல்வகணபதி, கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் எஸ்.ஆர்.சிவலிங்கம், ஆகியோர் முன்னிைல வகித்தனர். சேலம் கிழக்கு மாவட்ட தி.மு.க. இளைஞர் அணி அமைப்பாளர் டாக்டர் வீரபாண்டி ஆ.பிரபு மற்றும் குடும்ப உறுப்பினர்கள் மகேஸ்வரி காசி, நிர்மலா மதிவாணன், மலர்விழிசெந்தில் ஆனந்த், கிருத்திகா ஜெயரத்னா, பிருந்தாசெழியன், கயல்விழி, பாரிவேல், கவுதமி பிரபு, சூர்யா தருண் ஆகியோர் வரவேற்றனர்.
மு.க.ஸ்டாலின்
சிறப்பு அழைப்பாளராக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு வீரபாண்டி ஆ.ராஜா உருவப்படத்தை திறந்து வைத்தார். தொடர்ந்து மலர்தூவி அஞ்சலி செலுத்தி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
வீரபாண்டி ஆ.ராஜாவின் உருவப்படம் திறந்து வைக்கும் சூழ்நிலை இவ்வளவு சீக்கிரம் வரும் என்று நினைக்கவில்லை. எந்த பொறுப்பு கொடுத்தாலும் அதை நிறைவேற்றக்கூடிய ஆற்றல் பெற்றவர் ராஜா. அதன்படி இளைஞர் அணி, மாவட்ட செயலாளர், தேர்தல் பணிக்குழு செயலாளர், சட்டமன்ற உறுப்பினர் என அனைத்தையும் சிறப்புடன் பணியாற்றினார்.
அவர் தற்போது நம்மிடம் இல்லை. படமாக மாறி இருக்கிறார். வெறும் படமாக மட்டும் அல்ல பாடமாக நிலைத்து நிற்பார். ஏற்கனவே செழியன் இறந்தார். தற்போது ராஜாவும் இல்லை. அவர்களது குடும்பத்திற்கு எப்படி ஆறுதல் கூறுவது என்று தெரியாமல் என்னை நானே தேற்றிக்கொண்டேன். அவரது புகழ் நிலைத்து இருக்கும்.
எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கும்
சேலம் நிமிர்ந்து நிற்க முழுக்காரணம் வீரபாண்டி ஆறுமுகம் தான். இதை யாராலும் மறுக்க முடியாது. வீரபாண்டி ஆறுமுகம் எத்தனையோ நிகழ்ச்சிக்கு என்னை சேலத்துக்கு அழைத்து உள்ளார். தற்போது அவர் அழைக்காமல் சேலம் வந்து உள்ளேன். முதல்-அமைச்சராக நான் வந்து பேசும் போது வீரபாண்டி ஆறுமுகம் இருந்திருந்தால் எவ்வளவு மகிழ்ச்சியாக இருந்திருக்கும்.
கருணாநிதி முதல்-அமைச்சராக இருந்த போது வீரபாண்டி ஆறுமுகம் உள்ளாட்சித்துறை, விவசாயத்துறை அமைச்சராக பணியாற்றி உள்ளார். அப்போது ஏராளமான திட்டங்கள் கொண்டு வந்து சேலத்துக்கு பெருமை சேர்த்தார். கருணாநிதியிடம் பிடிவாதம் செய்து நிதியை பெறுவார். வீரபாண்டி ஆறுமுகம் செய்த சாதனைகளை மறுக்கமுடியாது.
நிமிர்ந்து நிற்கின்றன
1976-ம் ஆண்டு தி.மு.க. ஆட்சியை கலைத்தபோது கட்சியினர் கைது செய்யப்பட்டார்கள். சாதாரணமாக கைது செய்ய வில்லை. ஜாமீனில் வெளியில் வராதபடி 'மிசா' என்ற கொடூரமான சட்டத்தில் கைது செய்யப்பட்டனர். வீரபாண்டி ஆறுமுகம் மீது 50 பொய் வழக்குகள் போடப்பட்டன.
3 முறை சட்டமன்ற உறுப்பினர், அமைச்சராக இருந்த வீரபாண்டி ஆறுமுகத்தின் கையில் விலங்கு மாட்டி அழைத்து வந்தார்கள். 3 வருடம் அவர் சேலத்திற்குள் நுழையக்கூடாது என்றனர். இவ்வளவு தியாகம் செய்த மிக முக்கியமான குடும்பத்தின் உழைப்பால் தி.மு.க. உயர்ந்து நிற்கிறது. வீரபாண்டி ஆறுமுகம் போன்ற தியாக மரபர்கள் சிந்திய ரத்தத்தாலும், தியாகத்தாலும் தான், அண்ணா, கலைஞர் அறிவாலயங்கள் நிமிர்ந்து நிற்கின்றன. இவ்வாறு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
மவுன அஞ்சலி
விழாவில் வீரபாண்டி ஆ.ராஜாவின் மகளும், வீரபாண்டி ஒன்றியக்குழு உறுப்பினருமான டாக்டர்.ரா.மலர்விழிராஜா நன்றி கூறினார். தொடர்ந்து வீரபாண்டி ஆ.ராஜாவுக்கு மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.
இதில் வீரபாண்டி ஒன்றிய செயலாளர் எஸ்.வெண்ணிலா சேகர், சேலம் மத்திய மாவட்ட சுற்றுச்சூழல் அணி அமைப்பாளர் செ.உமாராணி, வக்கீல் எஸ்.ஆர்.அண்ணாமலை, மாநில தீர்மானக்குழு உறுப்பினர் தாமரைகண்ணன், ஒன்றிய பொறுப்பாளரும், ஒன்றியக்குழு முன்னாள் தலைவருமான ஏ.விஜயகுமார், மாவட்ட பிரதிநிதி கண்ணன், பனமரத்துப்பட்டி ஒன்றிய பொறுப்பாளர் பாரப்பட்டி சுரேஷ்குமார், வின்சென்ட் நாகா உள்பட பலர் கலந்து கொண்டனர்.