வர்த்தூர் பிரகாஷ் கடத்தல் வழக்கில் மூளையாக செயல்பட்டவர் துப்பாக்கியால் சுட்டுப்பிடிப்பு

முன்னாள் மந்திரி வர்த்தூர் பிரகாஷ் கடத்தப்பட்ட வழக்கில் மூளையாக செயல்பட்ட வாலிபரை போலீசார் துப்பாக்கியால் சுட்டுப்பிடித்த சம்பவம் பெங்களூருவில் நடந்து உள்ளது.

Update: 2021-12-11 21:31 GMT
பெங்களூரு:

முன்னாள் மந்திரி கடத்தல்

  கோலார் மாவட்டத்தை சேர்ந்தவர் வர்த்தூர் பிரகாஷ். முன்னாள் மந்திரியான இவர் கடந்த ஆண்டு(2020) ஆண்டு நவம்பர் மாதம் 25-ந் தேதி தனது காரில் டிரைவர் சுனில் என்பவருடன் கோலார் அருகே பெக்லி ஒசஹள்ளி என்ற இடத்தில் இருந்து கோலாருக்கு சென்று கொண்டு இருந்தார். அப்போது அந்த காரை வழிமறித்த 8 பேர் கும்பல் வர்த்தூர் பிரகாசையும், அவரது கார் டிரைவர் சுனிலையும் சரமாரியாக தாக்கியது. பின்னர் 2 பேரையும் தாங்கள் வந்த காரிலேயே அந்த கும்பல் கடத்தி சென்றது.

  பின்னர் ரூ.30 கோடி கேட்டு வர்த்தூர் பிரகாஷ், சுனிலை அந்த கும்பல் மிரட்டியது. மேலும் காருக்குள் வைத்தே வர்த்தூர் பிரகாஷ், சுனிலை அந்த கும்பல் சரமாரியாக தாக்கியது. இதையடுத்து வர்த்தூர் பிரகாஷ் தனது நண்பரான நயாஸ் என்பவரை தொடர்பு கொண்டு ரூ.48 லட்சம் கொண்டு வரும்படி கூறினார். அதன்படி பெங்களூருவில் ஒரு ஓட்டலில் வைத்து நயாசிடம் ரூ.48 லட்சத்தை அந்த கும்பல் பெற்று கொண்டது. ஆனாலும் வர்த்தூர் பிரகாசையும், சுனிலையும் விடுவிக்காமல் அந்த கும்பல் தாக்கியது. இதில் சுனில் மயக்கம் அடைந்தார்.

நிழல் உலக தாதா கூட்டாளி கைது

  இதனால் அவர் உயிர் இழந்து விட்டதாக கருதிய கடத்தல்காரர்கள் சுனிலை காரில் இருந்து வெளியே தள்ளிவிட்டு தப்பி சென்றது. பின்னர் கண்விழித்த சுனில் நடந்த சம்பவம் குறித்து பெல்லந்தூர் போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரின்பேரில் வர்த்தூர் பிரகாசை மீட்க போலீசார் நடவடிக்கை எடுத்தனர். இதனால் அந்த கும்பல் வர்த்தூர் பிரகாசை பெங்களூரு புறநகர் மாவட்டம் ஒசக்கோட்டை தாலுகா நந்தகுடி அருகே சிவனாப்பூர் பகுதியில் காரில் இருந்து தள்ளிவிட்டு சென்றது. அவரை அப்பகுதியினர் மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். தன்னை கடத்தியது குறித்து வர்த்தூர் பிரகாசும் பெல்லந்தூர் போலீசில் புகார் அளித்து இருந்தார்.

  அந்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் கடத்தல் கும்பலை பிடிக்க தீவிரம் காட்டினர். இதையடுத்து கடத்தல் வழக்கில் நிழல் உலக தாதா ரவி பூஜாரியின் கூட்டாளி கவிராஜ் உள்பட 7 பேர் கைது செய்யப்பட்டனர். ஆனால் இந்த வழக்கில் மூளையாக செயல்பட்ட ரோகித் (எ) லோகித் தலைமறைவானார். ரவுடியான அவர் மீது பெங்களூரு, கோலாரில் கொலை, கொள்ளை, கடத்தல், மிரட்டி பணம் பறிப்பு என 17 வழக்குகள் பதிவாகி இருந்தது. இதில் இந்திராநகர் பகுதியில் ஒரு ஆட்டோ டிரைவரை கடத்திய வழக்கும் அடங்கும். தலைமறைவாக இருந்த ரோகித்தை கைது செய்ய 4 தனிப்படைகளும் அமைக்கப்பட்டு இருந்தது.

துப்பாக்கியால் சுட்டுப்பிடிப்பு

  இந்த நிலையில் ரோகித் இந்திராநகர் அருகே சலகட்டா பகுதியில் காரில் சுற்றித்திரிவதாக நேற்று அதிகாலை இந்திராநகர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து இன்ஸ்பெக்டர் ஹரீஷ், சப்-இன்ஸ்பெக்டர் அமரேஷ், போலீஸ்காரர் சையது மொசினுல்லா ஆகியோர் ரோகித்தை பிடிக்க சென்றனர். அப்போது காரில் சுற்றிய ரோகித்தை போலீஸ்காரர்கள் சுற்றிவளைத்து பிடித்து கைது செய்தனர். அப்போது ரோகித் தன்னிடம் இருந்த ஆயுதத்தால் போலீஸ்காரர் சையது மொசினுல்லாவை தாக்கினார். இதில் அவரது கையில் பலத்த காயம் உண்டானது. பின்னர் ரோகித் அங்கிருந்து தப்பி ஓடினார்.

  இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் அமரேஷ் தன்னிடம் இருந்த துப்பாக்கியை எடுத்து வானத்தை நோக்கி ஒரு ரவுண்டு சுட்டு சரண் அடைந்து விடும்படி ரோகித்துக்கு எச்சரிக்கை விடுத்தார். ஆனால் அவர் சரண் அடைய மறுத்ததுடன் மீண்டும் போலீஸ்காரர்களை தாக்க முயன்றார். இதனால் அமரேஷ் துப்பாக்கியால் ரோகித்தை நோக்கி சுட்டார். இதில் அவரது வலது காலில் குண்டு துளைத்தது. இதையடுத்து அவர் அங்கேயே சுருண்டு விழுந்தார். பின்னர் அவரை போலீசார் கைது செய்தனர். தற்போது அவர் சிகிச்சைக்காக பெங்களூரு பவுரிங் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

பரபரப்பு

  இதுபோல ரோகித் தாக்கியதில் காயம் அடைந்த போலீஸ்காரர் சையதுவும் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

  இந்த சம்பவம் குறித்த புகாரின்பேரில் இந்திராநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர். முன்னாள் மந்திரி கடத்தல் வழக்கில் மூளையாக செயல்பட்ட வாலிபர் துப்பாக்கியால் சுட்டுப்பிடிக்கப்பட்ட சம்பவம் பெங்களூருவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்