தலைவலி குணமாக கரும்பால் தலையில் தாக்கப்பட்ட பெண் சாவு - தப்பி ஓடிய பூசாரிக்கு போலீஸ் வலைவீச்சு
சென்னராயப்பட்டணாவில் ஒரு பெண், தலைவலி குணமாக வேண்டி பெண்ணின் தலையில் பூசாரி ஒருவர் கரும்பால் பலமாக தாக்கினார். இதில் பரிதாபமாக அந்த பெண் இறந்தார். தப்பி ஓடிய பூசாரியை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.
பெங்களூரு:
தலைவலி குணமாக வேண்டி...
ஹாசன் மாவட்டம் சென்னராயப்பட்டணா டவுன் பகுதியில் வசித்து வந்தவர் பார்வதி(வயது 47). இவர் கடந்த சில நாட்களாக தலைவலி மற்றும் உடல்நலக்குறைவால் அதிப்பட்டு வந்தார். இதற்காக அவர் பல ஆஸ்பத்திரிகளில் சென்று சிகிச்சை பெற்றார். ஆனால் அவரது உடல்நிலை சரியாகவில்லை என்று தெரிகிறது. இதையடுத்து அவர் கோவிலுக்கு சென்று பூஜை செய்து வந்தார்.
அப்போது அவரிடம் பூசாரி ஒருவர் சிறப்பு பூஜை செய்தால் தலைவலி மற்றும் உடல்நல குறைபாடு குணமாகி விடும் என்று கூறியிருக்கிறார். அதை நம்பிய பார்வதி அந்த பூஜாரி கூறியபடி ஹிரியபட்டணாவில் உள்ள அம்மன் கோவிலுக்கு சென்று அங்கிருந்த பூசாரியை சந்தித்தார்.
கரும்பால் தாக்கினார்
பின்னர் அவர் கூறியபடி பூஜைகளை மேற்கொள்ள ஏற்பாடுகளை செய்தார். அதையடுத்து பார்வதி குணமாக வேண்டிய பூஜை செய்த அந்த பூசாரி, முடிவில் கரும்பால் பார்வதியின் தலையில் பலமாக அடித்து தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் பார்வதி தலையில் படுகாயம் அடைந்தார். சிறிது நேரத்தில் அவர் வலி தாங்க முடியாமல் அலறி துடித்து மயங்கி விழுந்தார். இதனால் பதறிப்போன அந்த பூசாரி அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.
இதையடுத்து அங்கிருந்தவர்களும், பார்வதியின் குடும்பத்தினரும் அவரை மீட்டு சிகிச்சைக்காக ஹாசனில் உள்ள ஹிம்ஸ் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பார்வதியை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
பூசாரிக்கு வலைவீச்சு
அதாவது கரும்பால் பார்வதியின் தலையில் அந்த பூசாரி பலமுறை பலமாக தாக்கி உள்ளார். இதில் படுகாயம் அடைந்த பார்வதி பரிதாபமாக இறந்துவிட்டது போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது. பின்னர் இதுபற்றி ஷரவணபெலகோலா போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்த போலீசார் ஆஸ்பத்திரிக்கு விரைந்து வந்து பார்வதியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும் அந்த பூசாரி மீது போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள அவரை வலைவீசி தேடிவருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.