ஓமலூர் அருகே மோட்டார் சைக்கிள் மோதி கணவன்-மனைவி பலி-மகனை ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்ற போது பரிதாபம்

ஓமலூர் அருகே உடல் நிலை சரியில்லாத மகனை ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்ற போது, மோட்டார் சைக்கிள் மோதியதில் கணவன், மனைவி பலியானார்கள்.

Update: 2021-12-11 21:27 GMT
ஓமலூர்:
ஓமலூர் அருகே உடல் நிலை சரியில்லாத மகனை ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்ற போது, மோட்டார் சைக்கிள் மோதியதில் கணவன், மனைவி பலியானார்கள்.
இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
தறித்தொழிலாளி
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே கஞ்சநாயக்கன்பட்டி கோட்டைமேடு பகுதியை சேர்ந்தவர் பாலன் (வயது 34). தறித்தொழிலாளி. இவருடைய மனைவி கற்பகம் (30), இவர்களுக்கு சவுமியா (13) என்ற மகளும், சந்தோஷ் (11) என்ற மகனும் உள்ளனர்.
இந்த நிலையில் சந்தோசிற்கு உடல் நலம் சரியில்லாததால் பாலன், அவரது மனைவி கற்பகம் ஆகிய இருவரும் ஸ்கூட்டரில் ஓமலூரில் உள்ள ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். அப்போது  ஓமலூர் அருகே சந்தைதடம் பஸ்நிறுத்தம் அருகே தர்மபுரி- சேலம் ரோட்டில் வந்து திரும்பிய போது, சேலம் நோக்கி சென்ற மோட்டார் சைக்கிள் பயங்கரமாக ஸ்கூட்டர் மீது மோதியது. 
2 பேர் சாவு
இதில் தூக்கி வீசப்பட்டதில் பாலன், கற்பகம் மற்றும் அவர்களது மகன் சந்தோஷ் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். அவர்களை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே பாலன், கற்பகம் ஆகியோர் உயிரிழந்தனர். சந்தோசிற்கு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் மோட்டார் சைக்கிளில் வந்த சேலம் ரெட்டியூர் பகுதியை சேர்ந்த பெனில்பிரைட் (22) என்பவரும் கீழே விழுந்ததில் படுகாயம் அடைந்தார். அவர் கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.
பந்தய மோட்டார் சைக்கிள்
இந்த விபத்து குறித்து தீவட்டிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இது குறித்து போலீசார் கூறுகையில், பெனில் பிரைட் கோவையில் உள்ள ஒரு என்ஜினீயரிங் கல்லூரியில் படித்து வருகிறார். இந்த நிலையில் கல்லூரி படிப்பு சம்பந்தமாக ஐதராபாத்துக்கு மோட்டார் சைக்கிளில் சென்று விட்டு, பெங்களூரு வழியாக சேலம் திரும்பிக்கொண்டிருந்தார். அப்போது தான் விபத்து நடந்துள்ளது. அவர் ஓட்டி வந்தது பந்தயங்களில் பயன்படுத்தப்படும் மோட்டார் சைக்கிள் ஆகும் என்றனர்.
பந்தய மோட்டார் சைக்கிள் மோதியதில் கணவன்-மனைவி பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்