பெற்றோரை பார்க்க கூடாது என சாமியார் கூறியதால் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை- ஆர்.டி.ஓ. விசாரணை
பெற்றோரை பார்க்க கூடாது என்று சாமியார் கூறியதால் கோபி அருகே இளம்பெண் ஒருவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இது தொடர்பாக ஆர்.டி.ஓ. விசாரணை நடத்தி வருகிறார்.
கடத்தூர்
பெற்றோரை பார்க்க கூடாது என்று சாமியார் கூறியதால் கோபி அருகே இளம்பெண் ஒருவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இது தொடர்பாக ஆர்.டி.ஓ. விசாரணை நடத்தி வருகிறார்.
இளம்பெண்
கோவை மாவட்டம் ஜடையம்பாளையம் குறிஞ்சி நகரை சேர்ந்தவர் ராஜன். இவருடைய மகள் சவுமியா (வயது 21). இவருக்கும் ஈரோடு மாவட்டம் கோபி சிறுவலூரை சேர்ந்த புவனேஷ் (25) என்பவருக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடந்தது. இவர்களுக்கு 9 மாத ஆண் குழந்தை உள்ளது.
இந்தநிலையில் சவுமியாவுக்கு வலிப்பு நோய் இருந்ததாக கூறப்படுகிறது. இதை குணப்படுத்த சாமியாராக இருக்கும் உறவினர் ஒருவரை புவனேஷின் குடும்பத்தினர் அழைத்து வந்துள்ளார்கள்.
சாமியாரின் கட்டளை
அப்போது சாமியார் அருள் வந்து, உன்னுடைய நோய் தீர சிறப்பு பூஜை செய்யவேண்டும். அதற்கு ரூ.50 ஆயிரம் செலவாகும். அதை உன் பெற்றோரிடம் வாங்கி வரவேண்டும். அதுவரை உன் பெற்றோரிடம் நீ பேசக்கூடாது என்று கூறியுள்ளார்.
அதை உண்மை என்று நம்பிய சவுமியா கடந்த 1½ மாதமாக பெற்றோரிடம் பேசாமல் இருந்துள்ளார். இதனால் அவர் மிகுந்த மனவேதனை அடைந்தார்.
ஆர்.டி.ஓ. விசாரணை
இந்தநிலையில் நேற்று வீட்டில் தூக்குப்போட்டு சவுமியா தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து விசாரிக்கவேண்டும் என்று அவரின் தந்தை ராஜன் சிறுவலூர் போலீசில் புகார் அளித்தார்.
அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் சவுமியாவுக்கும், புவனேசுக்கும் திருமணம் ஆகி ஒரு வருடமே ஆகியிருப்பதால் கோபி ஆர்.டி.ஓ. பழனிதேவி, துணை போலீஸ் சூப்பிரண்டு ஆறுமுகம் ஆகியோரும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.