பெரியசேமூர் மகா மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்: பெண்கள் முளைப்பாரி எடுத்து ஊர்வலம்

பெரியசேமூர் மகா மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகத்தையொட்டி பெண்கள் முளைப்பாரி எடுத்து ஊர்வலமாக கோவிலுக்கு வந்தனர்.

Update: 2021-12-11 21:23 GMT
ஈரோடு
பெரியசேமூர் மகா மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகத்தையொட்டி பெண்கள் முளைப்பாரி எடுத்து ஊர்வலமாக கோவிலுக்கு வந்தனர். 
முளைப்பாரி
ஈரோடு பெரியசேமூர் பகுதியில் பிரசித்தி பெற்ற மகா மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கடந்த சில மாதங்களாக புனரமைப்பு பணிகள் நடைபெற்றது. இந்த நிலையில் பணிகள் முடிவடைந்ததை தொடர்ந்து கோவிலில் கும்பாபிஷேகம் நடத்த நிர்வாகிகள் முடிவு செய்தனர்.
அதன்படி நேற்று முன்தினம் காலை கணபதி ஹோமம் நிகழ்ச்சியுடன் கும்பாபிஷேக விழா தொடங்கியது. அன்று காலை 9 மணிக்கு பக்தர்கள் காவிரி ஆற்றுக்கு சென்று தீர்த்தம் எடுத்து கோவிலுக்கு வந்தனர். நேற்று காலை பெண்கள் தங்கள் வீடுகளில் இருந்து முளைப்பாரி எடுத்து கோவிலுக்கு ஊர்வலமாக வந்தனர். பின்னர் அம்மனுக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது.
கும்பாபிஷேகம்
அதைத்தொடர்ந்து மாலை 4 மணிக்கு முதல் கால யாக பூஜையும், இரவு 8.30 மணிக்கு தீபாராதனையும் நடந்தது. இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 8.30 மணிக்கு 2-ம் கால யாக பூஜையும், 10 மணிக்கு கோபுர கலசம் வைத்தல் நிகழ்ச்சியும், மாலை 5.30 மணிக்கு 3-ம் கால யாக பூஜையும், இரவு 9.30 மணிக்கு தெய்வ சிலைகளுக்கு அஷ்டபந்தன மருந்து சாத்துதல் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது.
நாளை (திங்கட்கிழமை) அதிகாலை 4.30 மணிக்கு 4-ம் கால யாக பூஜையும், காலை 6 மணிக்கு யாக சாலையில் இருந்து கடங்கள் புறப்படுதல் நிகழ்ச்சியும் நடக்கிறது. அதைத்தொடர்ந்து காலை 6.30 மணிக்கு மகா மாரியம்மன் கோவில் கோபுர கலசங்களுக்கு சிவாச்சாரியார்கள் புனிதநீர் ஊற்றி கோவில் கும்பாபிஷேகத்தை நடத்தி வைக்கிறார்கள். காலை 7 மணிக்கு அம்மனுக்கு மகா அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடக்கிறது.

மேலும் செய்திகள்