போதுமான ஆதாரங்கள் இல்லாததால் வாலிபர் விடுதலை
போதுமான ஆதாரங்கள் இல்லாததால் வாலிபர் விடுதலை செய்யப்பட்டார்.
மதுரை,
திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை பகுதியை சேர்ந்த 12 வயது சிறுமி, பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக வடமதுரை போலீசார் வழக்குப்பதிவு செய்து கிருபானந்தன்(வயது 19) என்பவரை கைது செய்தனர். இந்த வழக்கினை திண்டுக்கல் மாவட்ட மகளிர் கோர்ட்டு விசாரித்தது. முடிவில், கிருபானந்தன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு போதிய சாட்சியங்கள் இல்லை என்று கூறி, அவரை விடுதலை செய்து திண்டுக்கல் மகளிர் கோர்ட்டு தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பு தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பின்னர் இந்த தீர்ப்பை எதிர்த்தும், கிருபானந்தனுக்கு தண்டனை விதிக்க வேண்டும் என்றும் தமிழக அரசு சார்பில் மதுரை ஐகோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை நீதிபதிகள் வைத்தியநாதன், ஜெயச்சந்திரன் ஆகியோர் விசாரித்தனர். முடிவில், சிறுமியை கடைசியாக பார்த்தவர்கள் யார், யார் என்பது பற்றி முறையாக விசாரிக்கப்படவில்லை. சம்பவம் தொடர்பான ஆதாரங்கள் எடுக்கப்பட்டதாக கூறப்படும் நிலையில், அது எங்கிருந்து எடுக்கப்பட்டது என்பது குறிப்பிடப்படவில்லை. எனவே சந்தேகத்தின் பலனை கிருபானந்தனுக்கு சாதகமாக்கி, அவரை விடுதலை செய்து கீழ்கோர்ட்டு பிறப்பித்த உத்தரவு உறுதி செய்யப்படுகிறது என உத்தரவிட்டனர்.