செல்போன் கடை ஊழியர்கள் 2 பேருக்கு அரிவாள் வெட்டு; மேலாளர் கைது
பாளையங்கோட்டையில் செல்போன் கடையில் வேலை செய்து கொண்டிருந்த ஊழியர்கள் 2 பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. இதுதொடர்பாக மேலாளர் கைது செய்யப்பட்டார்.;
நெல்லை:
பாளையங்கோட்டையில் செல்போன் கடையில் வேலை செய்து கொண்டிருந்த ஊழியர்கள் 2 பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. இதுதொடர்பாக மேலாளர் கைது செய்யப்பட்டார்.
செல்போன் கடை ஊழியர்கள்
நெல்லை சந்திப்பு சிந்துபூந்துறையை சேர்ந்தவர் முகமது அலி மகன் மைதீன் (வயது 30). மேலப்பாளையம் ஆமீன்புரம் பகுதியை சேர்ந்தவர் ஆலியப்பா மகன் பஷீர் (24). இவர்கள் 2 பேரும் பாளையங்கோட்டை முருகன்குறிச்சியில் உள்ள ஒரு செல்போன் கடையில் வேலை செய்து வருகின்றனர்.
இந்த கடையில் தாழையூத்து பகுதியை சேர்ந்த செல்வம் (26) என்பவர் மேலாளராக பணியாற்றி வருகிறார். செல்வத்திற்கும், கடை ஊழியர்களுக்கும் இடையே பணிக்கு வந்து, செல்லும் நேரம் தொடர்பாக தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
அரிவாள் வெட்டு -மேலாளர் கைது
இந்த நிலையில், நேற்று கடைக்கு செல்வம் வந்தார். அப்போது, திடீரென்று தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் மைதீன், பஷீர் ஆகிய 2 பேரையும் வெட்டியதாக கூறப்படுகிறது. இதனால் கடையில் இருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் செல்வம் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.
அரிவாள் வெட்டில் பலத்த காயமடைந்த மைதீன், பஷீர் ஆகிய 2 பேரையும் அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த பாளையங்கோட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சண்முகமூர்த்தி தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும், தப்பி ஓடிய செல்வத்தை கைது செய்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மேல்விசாரணை நடத்தி வருகிறார்கள்.
வீடியோ காட்சி
இதற்கிடையே, 2 பேரை செல்வம் அரிவாளால் வெட்டும் காட்சி செல்போன் கடையில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது. அந்த வீடியோ காட்சி தற்போது சமூக வலைத்தளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.