குழந்தை இறந்து பிறந்த நிலையில் தாயும் சாவு

குழந்தை இறந்து பிறந்த நிலையில் தாயும் உயிரிழந்தார்.

Update: 2021-12-11 19:48 GMT
பெரம்பலூர்:

நிறைமாத கர்ப்பிணி
பெரம்பலூர் மாவட்டம், குன்னம் தாலுகா, குரும்பாபாளையம் அருகே பனங்கூர் கிராமத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மனைவி முத்துலட்சுமி. இவர்களது 2-வது மகளான மகாலட்சுமியை பெரம்பலூர் மாவட்டம், குன்னம் தாலுகா, ஆண்டிகுரும்பலூர் அருகே சின்ன பரவாய் கிராமத்தை சேர்ந்த செல்வராஜின் மகன் மருதுபாண்டி என்பவருக்கு கடந்த மார்ச் மாதம் 25-ந்தேதி திருமணம் செய்து கொடுத்தனர்.
தற்போது நிறைமாத கர்ப்பிணியாக இருந்த மகாலட்சுமி குன்னம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்கு சென்று வந்தார்.
அறுவை சிகிச்சை
நேற்று முன்தினம் காலை மகாலட்சுமியை அவரது தாய் முத்துலட்சுமி குன்னம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு பரிசோதனைக்காக அழைத்து சென்றார். அப்போது மகாலட்சுமி பயத்தின் காரணமாக பதற்றமாக இருந்ததால் டாக்டர்கள் பரிந்துரையின்பேரில் மேல் சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் அன்று மதியம் சேர்த்தனர்.
அங்கு சிகிச்சை அளித்த டாக்டர்கள் நேற்று மகாலட்சுமிக்கு பனிக்குடம் உடைந்துள்ளதால், வயிற்றில் இருக்கும் குழந்தையை அறுவை சிகிச்சை செய்து எடுக்க வேண்டும் என்று தெரிவித்ததாகவும், அதற்கு மகாலட்சுமி குடும்பத்தினர் சம்மதித்ததாகவும் கூறப்படுகிறது.
குழந்தையும், தாயும் சாவு
இதைத்தொடர்ந்து நேற்று மதியம் மகாலட்சுமிக்கு டாக்டர்கள் அறுவை சிகிச்சை மேற்கொண்டபோது, வயிற்றில் இருந்த பெண் குழந்தை இறந்து பிறந்தது. இதையடுத்து உயிருக்கு போராடி கொண்டிருந்த மகாலட்சுமிக்கு டாக்டர்கள் செயற்கை சுவாசம் அளித்த நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இது தொடர்பாக முத்துலட்சுமி பெரம்பலூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையடுத்து மகாலட்சுமி மற்றும் குழந்தையின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனை பிரேத கூடத்தில் வைக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக பெரம்பலூர் வருவாய் கோட்டாட்சியரும் விசாரணை மேற்கொள்ளலாம் என்று கூறப்படுகிறது. பனிக்குடம் உடைந்ததால் தாயும், குழந்தையும் உயிரிழந்த சம்பவம் அவரது குடும்பத்தினர், உறவினர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்