போக்குவரத்து நெரிசலால் பொதுமக்கள் அவதி

அருப்புக்கோட்டையில் போக்குவரத்து நெரிசலால் பொதுமக்கள் கடும் அவதிப்படுகின்றனர்.

Update: 2021-12-11 19:34 GMT
அருப்புக்கோட்டை, 
அருப்புக்கோட்டையில் போக்குவரத்து நெரிசலால் பொதுமக்கள் கடும் அவதிப்படுகின்றனர். 
போக்குவரத்து நெரிசல் 
அருப்புக்கோட்டையில் பஜார் பகுதி வழியாக தான் பிரதான வாகன போக்குவரத்து இருந்து வருகிறது. தினமும் நூற்றுக்கணக்கான பஸ்கள், நான்கு சக்கர வாகனங்கள், மோட்டார் சைக்கிள்கள் பஜார் வழியாக செல்கின்றன.இந்நிலையில் அண்ணாசிலை குறுகலான பாதையில் சாலையின் ஓரம் சைக்கிள் மோட்டார் சைக்கிள்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்களையும் நிறுத்துவதால் பஜார் பகுதியில் அடிக்கடி கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
அதிலும் குறிப்பாக மதிய வேளையில் போக்குவரத்து போலீசார் இல்லாத நேரத்தில் பாதி சாலையை அடைத்து வாகனங்களை நிறுத்துவதால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. 
ெபாதுமக்கள் அவதி 
இதனால் பொதுமக்கள் கடும் அவதி அடைகின்றனர். அவசர தேவைக்கு ஆம்புலன்ஸ் கூட செல்ல முடியாத சூழல் நிலவுகிறது. 
இதேபோல் சிவன் கோவில் பஸ் நிறுத்தம் வரையிலும் சாலையின் ஓரம் ஆங்காங்கே போக்குவரத்திற்கு இடையூறு விளைவிக்கும் வகையில் கார்களை ஆங்காங்கே நிறுத்துகின்றனர். இதனால் அந்த வழியாக வாகனங்களில் செல்வோர் சிரமத்துடன் செல்வதுடன், போக்குவரத்து நெரிசலும் அதிகரித்த வண்ணம் உள்ளது. மேலும் காந்திநகர் சர்வீஸ் சாலையின் ஓரமாக லாரிகள் அதிக அளவில் நிறுத்தப்படுவதால் திருச்செந்தூர், மதுரை உள்ளிட்ட ஊர்களில் இருந்து நகருக்குள் வரும் வாகனங்கள், பஸ்கள் வாகன நெரிசலில் சிக்குகின்றன. 
நடவடிக்கை 
இதனால் மதுரையில் இருந்து திருச்செந்தூர் செல்லும் பஸ்கள் புறநகர் பஸ் நிறுத்தத்திற்கு வராமல் அப்படியே புறவழிச்சாலை வழியாக சென்று விடுகின்றன. 
இதனால் பயணிகள் பெரும் இன்னலுக்கு ஆளாகின்றனர்.
 எனவே போக்குவரத்து போலீசார் சாலையின் ஓரம் வாகனங்களை நிறுத்துவதை முறைப்படுத்த வேண்டும். சாலையில் போக்குவரத்திற்கு இடையூறாக வாகனங்களை நிறுத்துபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

மேலும் செய்திகள்