ஓடும் பஸ்சில் அரிவாள் வெட்டுக்காயம் அடைந்த வாலிபர் சாவு
ஓடும் பஸ்சில் அரிவாள் வெட்டுக்காயம் அடைந்த வாலிபர் சாவு
பரமக்குடி
ராமநாதபுரம் மாவட்டம் அரியமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த மணிகண்டன் என்பவரை கடந்த 2019-ம் ஆண்டு ஒரு கும்பல் கொலை செய்தது. இந்த கொலை வழக்கில் 18 வயதான 3 வாலிபர்களும், தர்மலிங்கம்(வயது 52) என்பவரும் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கு விசாரணைக்காக நேற்றுமுன்தினம் ராமநாதபுரம் சிறார் நீதிமன்றத்தில் 4 பேரும் ஆஜராகி விட்டு பின்பு அங்கிருந்து பஸ்சில் ஏறி மதுரையை நோக்கி வந்து கொண்டிருந்தனர்.
அப்போது அவர்களை பின்தொடர்ந்து ஒரு கும்பல் காரில் வந்தது. பரமக்குடி அருகே உள்ள கமுதக்குடி தேசிய நெடுஞ்சாலையில் பஸ் வந்தபோது காரில் வந்த 6 பேர் கும்பல் அந்த பஸ்சை வழிமறித்து பஸ்சுக்குள் ஏறியது. பின்னர் பஸ்சில் இருந்த தர்மலிங்கம் உள்பட 4 பேரையும் சரமாரியாக அரிவாளால் வெட்டிவிட்டு வந்த காரிலேயே ஏறி தப்பினர். அரிவாள் வெட்டில் படுகாயம் அடைந்த 4 பேரையும் மீட்டு மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். இதில் சிகிச்சை பலனின்றி ஒரு வாலிபர் பரிதாபமாக இறந்தார். மற்ற 3 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த சம்பவம் குறித்த போலீஸ் விசாரணையில் 2019-ம் ஆண்டு மணிகண்டனை பணத்திற்காக கூலிப்படையாக வந்து இந்த 4 பேரும் வெட்டி கொன்றதாகவும், அதற்கு பழிக்குப்பழியாக மணிகண்டன் தரப்பைச் சேர்ந்தவர்கள் இவர்களை வெட்டியதாகவும் போலீசார் தெரிவித்தனர். ஓடும் பஸ்சில் 4 பேரையும் வெட்டுவிட்டு தப்பியவர்களை தீவிரமாக தேடிவருகிறார்கள்.