‘தினத்தந்தி’ புகார் பெட்டி

‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 91761 28888 என்ற வாட்ஸ்-அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:

Update: 2021-12-11 17:29 GMT
‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 91761 28888 என்ற வாட்ஸ்-அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

பாதாள சாக்கடை குழாயில் உடைப்பு
நெல்லை மாநகராட்சி 28-வது வார்டு குறிச்சி- குலவணிகர்புரம் ரோடு தொம்மை மிக்கேல்புரத்தில் பாதாள சாக்கடையில் பல்வேறு இடங்களில் உடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் வெளியேறுகிறது. இதனால் தெருக்களில் கழிவுநீர் தேங்கி சுகாதாரக்கேடு ஏற்படுகிறது. எனவே, பாதாள சாக்கடையில் ஏற்பட்ட அடைப்புகளை அகற்றி, உடைப்புகளை சீரமைத்து, கழிவுநீர் முறையாக வழிந்தோடச் செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-முத்துராஜ், தொம்மை மிக்கேல்புரம்.

சாலை, வாறுகால் வசதி தேவை
வள்ளியூர் ஹவுசிங் போர்டு காலனி பகுதியில் சாலை, வாறுகால் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் அமைக்கப்படவில்லை. இதனால் மழைநீருடன் கழிவுநீரும் கலந்து தெருக்களில் தேங்குவதால் சுகாதாரக்கேட்டை ஏற்படுத்துகிறது. எனவே சாலை, வாறுகால் வசதி அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.
-புருஸ்லின், வள்ளியூர்.

கால்வாய் ஆக்கிரமிப்பு அகற்றப்படுமா?
கூடங்குளம் அருேக சங்கநேரி குளம் நிரம்பி துலாவடி கூடங்குளத்துக்கு குறைந்தளவு தண்ணீர் வருகிறது. துலாவடி கூடங்குளத்துக்கு தண்ணீர் வரும் நீர்வரத்து கால்வாயில் பல்வேறு இடங்களில் அடைப்புகளும், ஆக்கிரமிப்புகளும் உள்ளன. எனவே, நீர்வரத்து கால்வாயில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, துலாவடி கூடங்குளத்தை நிரப்ப அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ஜேம்ஸ் இன்பஜீவன், கூடங்குளம்.

வடியாத மழைநீர்
நாங்குநேரி அருகே இலங்குளம் பற்பநாதபுரத்தில் வீடுகளைச் சூழ்ந்த மழைநீர் நீண்ட நாட்களாக வடியவில்லை. இதனால் சுகாதாரக்கேடு ஏற்பட்டு நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே, மழைநீரை வடிய வைக்க அதிகாரிகள் நடவடிக்கை கேட்டுக் கொள்கிறேன்.
-சக்திவேல், பற்பநாதபுரம்.

பழுதடைந்த பயணிகள் நிழற்கூடம்
தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே திப்பணம்பட்டியை அடுத்த நாட்டார்பட்டியில் பயணிகள் நிழற்கூடம் பழுதடைந்த நிலையில் உள்ளது. அந்த கட்டிடத்தின் காங்கிரீட் மேற்கூரை சிமெண்டு பூச்சுகள் அடிக்கடி பெயர்ந்து விழுகிறது. எனவே, அந்த கட்டிடத்துக்குள் யாரும் செல்லாதவாறு முட்செடிகளால் அடைத்து வைக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் மழையிலும், வெயிலிலும் காத்து கிடந்து பஸ் ஏறி செல்கின்றனர். எனவே, பழுதடைந்த பயணிகள் நிழற்கூடத்தை அகற்றி விட்டு புதிதாக கட்டிக் கொடுப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-பேச்சிமுத்து, நாட்டார்பட்டி.

சுகாதாரக்கேடு
வாசுதேவநல்லூர் அருகே கூடலூர் தெற்கு பிள்ளையார் கோவில் தெருவில் மழைநீர் நீண்ட நாட்களாக வடிந்து செல்லாமல் சேறும் சகதியுமாக உள்ளது. இதனால் கொசுக்கள் உற்பத்தியாகி, நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே சாலை, வாறுகால் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க அதிகாரிகள் நடவடிக்ைக எடுக்க வேண்டுகிறேன்.
-உதயகுமார், கூடலூர்.

ஒளிராத தெருவிளக்குகள்
தூத்துக்குடி மாவட்டம் சாயர்புரம் அருகே கட்டாலங்குளம் பஞ்சாயத்து போப் காலனியில் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக தெருவிளக்குகள் எரியவில்லை. இதனால் இரவில் அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் அச்சத்துடனே கடந்து செல்கின்றனர். எனவே, தெருவிளக்குகள் மீண்டும் ஒளிரச் செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டுக் கொள்கிறேன்.
-பால்துரை, சாயர்புரம்.

வீடுகளை சூழ்ந்த மழைநீர்
ஆறுமுகநேரி பாரதி நகரில் மழைநீருடன் கழிவுநீரும் கலந்து குடியிருப்புகளை சூழ்ந்து பல நாட்களாக தேங்கியுள்ளது. இதனால் சுகாதாரக்கேடு ஏற்படுவதால், தேங்கிய தண்ணீரை அகற்றவும், சாலை, வாறுகால் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேற்கொள்ளவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-அருணாசலம், ஆறுமுகநேரி.

குடிநீர் தட்டுப்பாடு
சாத்தான்குளம் அருகே மேல நடுவக்குறிச்சியில் ஆழ்துளை கிணறு அமைத்து குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது. இந்த நிலையில் அந்த ஆழ்துளை கிணற்றில் தண்ணீர் இல்லாததால் மோட்டாரை அகற்றிச் சென்றனர். இதனால் அங்கு குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது. எனவே, அங்கு புதிதாக ஆழ்துளை கிணறு அமைத்து சீராக குடிநீர் வினியோகம் செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டுக் கொள்கிறேன்.
-நவீன் கண்ணன், மேல நடுவக்குறிச்சி.

வேகத்தடை தேவை
ஸ்ரீவைகுண்டம் அருகே பேட்மாநகரத்துக்கு சுந்தரலிங்கநகர் மேட்டுப்பகுதியில் இருந்து வேகமாக வரும் கனரக வாகனங்களால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது. எனவே, அங்கு மெயின் ரோட்டில் தெருக்கள் சந்திக்கும் இடத்தில் போதிய வேகத்தடைகள் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-அபுபக்கர் சித்திக், பேட்மாநகரம்.

மேலும் செய்திகள்