சேந்தமங்கலம் அருகே எலிக்கு வைத்த மின்வேலியில் சிக்கி விவசாயி சாவு

சேந்தமங்கலம் அருகே எலிக்கு வைத்த மின்வேலியில் சிக்கி விவசாயி பரிதாபமாக இறந்தார்.

Update: 2021-12-11 17:11 GMT
சேந்தமங்கலம்:
எலி தொல்லை
சேந்தமங்கலம் அருகே உள்ள குப்பநாயக்கனூரை சேர்ந்தவர் தியாகராஜன் (வயது 51). விவசாயி. இவருடைய மனைவி செல்லக்கிளி (39). இந்த தம்பதிக்கு எஸ்வந்த் (13) என்ற மகன் உள்ளான். தியாகராஜன் தனது வீட்டுக்கு எதிரே கொட்டகை அமைத்து மாடுகளை வளர்த்து வந்தார். 
அந்த கொட்டகையில் எலிகளின் தொல்லை அதிகமாக காணப்பட்டது. இதனால் அதனை கட்டுப்படுத்த கொட்டகையில் மின்வேலி அமைத்திருந்தார்.
விவசாயி சாவு
இந்தநிலையில் நேற்று தியாகராஜன் மாட்டு கொட்டகையில் வேலை பார்த்து கொண்டிருந்தார். அவர் மின்வேலி இணைப்பை துண்டிக்கவில்லை. அப்போது அவரது கால் மின்வேலி மீது பட்டது. இதனால் அவரை மின்சாரம் தாக்கியதில், அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். 
இதுகுறித்து தகவல் அறிந்த சேந்தமங்கலம் போலீசார் அங்கு விரைந்து சென்று விசாரித்தனர். பின்னர் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேந்தமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். எலி தொல்லையை கட்டுப்படுத்த அமைத்த மின்வேலியில் சிக்கி விவசாயி பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்