திருச்செங்கோடு அருகே ரிக் அதிபர்கள் வீடுகளில் 17 பவுன் நகைகள் திருட்டு-மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
திருச்செங்கோடு அருகே ரிக் அதிபர்கள் வீடுகளில் 17 பவுன் நகைகள் திருடப்பட்டது. இதுதொடர்பாக மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
எலச்சிபாளையம்:
வீடுகளில் திருட்டு
திருச்செங்கோடு அருகே உள்ள ஆண்டிபாளையம் எழில்நகரில் வசித்து வருபவர் பழனிவேல் (வயது 44). ரிக் வண்டி அதிபர். நேற்று முன்தினம் இரவு இவர் தனது குடும்பத்தினருடன் வீட்டில் தூங்கி கொண்டிருந்தார். அப்போது வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர்கள் அங்கு பீரோவில் இருந்த 5 பவுன் நகைகள், ரூ.10 ஆயிரம் ஆகியவற்றை திருடி சென்றனர்.
இதேபோல் ஊஞ்சப்பாளையத்தில் ரிக் வண்டி அதிபர் லோகநாதன் வீட்டுக்குள் மர்ம நபர்கள் புகுந்தனர். அங்கு அவர்கள் 12 பவுன் நகைகளை திருடி சென்றனர். நேற்று காலை வீடுகளில் திருட்டு சம்பவம் நடந்ததை பார்த்து ரிக் வண்டி அதிபர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் திருச்செங்கோடு ஊரக போலீசாருக்கு தகவல் அளித்தனர்.
போலீசார் விசாரணை
அதன்பேரில் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். மேலும் கைரேகை நிபுணர்களும் அங்கு வரவழைக்கப்பட்டனர். அவர்கள் வீடுகளில் பதிவாகி இருந்த தடயங்கள், கைரேகைகளை சேகரித்தனர். திருட்டு சம்பவங்கள் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.
அதில் ஆண்டிபாளையம் வெற்றி நகர் பகுதியில் விஜய் ஆனந்த் என்பவரது வீட்டுக்குள் 4 பேர் கொண்ட மர்ம கும்பல் புகுந்து திருட முயன்றபோது, குடும்பத்தினர் விழித்து சத்தம் போட்டதால் அவர்கள் தப்பி ஓடியதும், மர்ம கும்பல் துணியால் தங்களது முகத்தை மூடியபடியும், உடல் முழுவதும் எண்ணெய் பூசிய படியும் வந்தது தெரியவந்தது. இதனால் ஒரே கும்பல் தான் இந்த திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகம் அடைந்துள்ளனர்.
பொதுமக்கள் அச்சம்
இந்த சம்பவங்கள் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, சம்பவம் நடந்த பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கேமராக்களின் காட்சிகளை தீவிரமாக ஆய்வு செய்து வருகிறார்கள். மேலும் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்ட மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள். திருச்செங்கோடு அருகே ரிக் அதிபர்கள் வீடுகளில் மர்ம நபர்கள் புகுந்து 17 பவுன் நகைகள், ரூ.10 ஆயிரத்தை திருடிய சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் அடிக்கடி நடந்து வரும் திருட்டு சம்பவங்கள் திருச்செங்கோடு பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.