நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி அதற்கான வாக்கு எண்ணிக்கை மையங்களில் கலெக்டர் மதுசூதன்ரெட்டி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர். அதன் ஒரு பகுதியாக காரைக்குடி அழகப்பா பாலிடெக்னிக் கல்லூரியில் காரைக்குடி நகராட்சி, கானாடுகாத்தான், கண்டனூர், கோட்டையூர், பள்ளத்தூர் மற்றும் புதுவயல் பேரூராட்சிகளுக்கு வாக்கு எண்ணிக்கை மையங்கள் அமைக்கப்பட்டு வருவதை பார்வையிட்டனர். பின் அங்கு உட்கட்டமைப்பு வசதிகள் பாதுகாப்பு தன்மை,வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் சென்றுவரும் பகுதிகள் என அனைத்து பகுதிகளையும் பார்வையிட்டதுடன் கண்காணிப்பு கேமரா இணைப்பு பணிகள் குறித்து கேட்டறிந்தனர்.ஆய்வின் போது மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் லோகன் (தேர்தல்) சிவகங்கை மண்டல பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் ராஜா, காரைக்குடி தாசில்தார் மாணிக்கவாசகம் மற்றும் தேர்தல் அலுவலர்கள் உடனிருந்தனர்.