மின்வாரிய அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகை
சாத்தான்குளம் மின்வாரிய அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகையிட்டனர்.
சாத்தான்குளம்:
சாத்தான்குளம் அருகே அமுதுண்ணாக்குடியில் இருந்து செட்டிக்குளம் செல்லும் வழியில் கோமாநேரி பீடரில் உள்ள டிரான்ஸ்பார்மரில் இருந்து விவசாய நிலங்களுக்கு மின்வினியோகம் செய்யப்பட்டு வந்தது. கடந்த 2 மாதங்களுக்கு முன்பு இந்த மின்மாற்றி பழுதடைந்தது. இதனால் அந்த மின்மாற்றியை மின்வாரியத்தினர் எடுத்து சென்றனர். இதனால் விவசாயிகள் பாதிக்கப்பட்டனர்.
எனவே அங்கு புதிய மின்மாற்றி அமைக்க வேண்டும் என மின்வாரியத்திடம் விவசாயிகள் பலமுறை முறையிட்டும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இந்்தநிலையில் நேற்று அப்பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் சாத்தான்குளம் மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது அதிகாரிகள் அவர்களிடம், 2 நாட்களில் புதிய மின்மாற்றி அமைக்கப்படும் என கூறியதால் அவர்கள் கலைந்து சென்றனர்.