தம்பதியை தாக்கிய 3 பேர் கைது

தூத்துக்குடி அருகே தம்பதியை தாக்கிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.;

Update: 2021-12-11 16:43 GMT
ஸ்பிக் நகர்:
தூத்துக்குடி அருகே முள்ளக்காடு மேற்கு பகுதியை சேர்ந்தவர் ஆதிலிங்கம் (வயது 72). இவர் தனது வீட்டில் ஆடு, மாடுகள் வளர்த்து வருகிறார். கடந்த 9-ந் தேதி நள்ளிரவில் அத்திமரப்பட்டியை சேர்ந்த சற்குணம் மகன் முத்துக்குமார் உள்ளிட்ட 3 பேர் ஆதிலிங்கம் வீட்டின் அருகே முயல் வேட்டைக்கு சென்றுள்ளார். அப்போது அவர்கள் டார்ச் லைட் அடித்து வந்ததில் ஆதிலிங்கத்தின் ஆடு, மாடுகள் மிரண்டு போய் கலந்துள்ளன. மேலும் அப்போது அவரது நாயும் குரைத்துள்ளது, சப்தம் கேட்டு ஆதிலிங்கம் மற்றும் அவரது மகனும் வெளியே வந்து ஏன் இங்கே இந்த நேரத்தில் வந்தீர்கள் என்று கேட்டுள்ளனர். அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. உடனே ஆதிலிங்கம் தகராறு செய்யாமல் இங்கிருந்து சென்று விடுங்கள் என்று கூறியதை தொடர்ந்து அவர்கள் அங்கிருந்து கிளம்பி சென்றனர்.
மீண்டும் நேற்று முன்தினம் ஆதிலிங்கத்தின் வீட்டிற்கு முத்துக்குமார் தனது நண்பர்களான குமாரசாமி நகரைச் சேர்ந்த யுவராஜ், தங்கமணி நகரை சேர்ந்த மிக்கேல் மகன் சதீஷ், முனிசாமி நகரைச் சேர்ந்த ராமச்சந்திரன் ஆகியோருடன் சென்று ஆதிலிங்கத்திடம் தகராறு செய்தார். இதில் ஆதி லிங்கம் மற்றும் அவரது மனைவி ராஜேஸ்வரி (57) ஆகியோரை அரிவாள் மற்றும் உலக்கையால் தாக்கியுள்ளனர். தடுக்க வந்த அவரது மகன் அகிலனையும் (18) தாக்கியுள்ளனர். இதில் காயம் அடைந்த ஆதிலிங்கமும், அவரது மனைவி ராஜேஸ்வரியும் தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். இதுகுறித்த புகாரின் பேரில் முத்தையாபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முத்துமாலை வழக்குப்பதிவு செய்தார். இன்ஸ்பெக்டர் ஜெயசீலன் விசாரணை நடத்தி நேற்று முத்துக்குமார், யுவராஜ் மற்றும் ராமச்சந்திரன் ஆகியோரை கைது செய்தார். தலைமறைவான சதீஷை போலீசார் தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்