தினத்தந்தி புகார் பெட்டி

நாகை, திருவாரூர்், மயிலாடுதுறை பகுதிகளில் உள்ள குறைகள் புகார் பெட்டியில் கூறப்பட்டுள்ளது.

Update: 2021-12-11 16:40 GMT
ஆஸ்பத்திரி வேண்டும்
திருவாரூர் மாவட்டம் பேரளம் பகுதியில் ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. இங்கு பேரளம் பகுதியை சுற்றியுள்ள பல்வேறு கிராமத்தினர் சிகிச்சை பெற்று பயன் அடைந்து வருகின்றனர். ஆனால் இங்கு போதிய மருத்துவ வசதி இல்லாததால் அவசர சிகிச்சைக்கு வருபவர்கள் திருவாரூர், மயிலாடுதுறைக்கு செல்ல வேண்டிய சூழல் உள்ளது. மேலும் இரவு நேரங்களில் சிகிச்சைக்கு வருபவர்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். எனவே பொதுமக்களின் நலன் கருதி பேரளம் பகுதியில் 24 மணி நேரமும் மருத்துவ சேவை கிடைக்கவும், ஆரம்ப சுகாதார நிலையத்தை ஆஸ்பத்திரியாக தரம் உயர்த்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.
-கார்த்திகேயன், பேரளம்.
சுகாதார சீர்கேடு
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் பகுதி காவேரி ஆற்றுப்பாலம் அருகே டி.எஸ்.வி.எஸ். நகரில் இறைச்சி கழிவுகள் மற்றும் குப்பைகள் கொட்டப்படுகிறது. இதனால் அந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. மேலும், இறைச்சி கழிவுகளை தேடி நாய்கள் அதிகளவில் குவிந்து வருகிறது. இவை அந்த வழியாக செல்லும் பெண்கள், குழந்தைகள் மற்றும் முதியவர்களை அடிக்கடி கடித்துவிடுகிறது. மேலும், குவிந்து கிடக்கும் கழிவுகளால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு தொற்று நோய்கள் பரவும் அபாயம் உள்ளது. எனவே, மேற்கண்ட பகுதியில் இறைச்சி கழிவுகள் மற்றும் குப்பைகளை கொட்டப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.
-சக்தி பிரகாசம், குத்தாலம்.
மின்விளக்கு ஒளிருமா?
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே உள்ள தேரழந்தூர் கடை வீதியில் பொதுமக்கள் வசதிக்காக உயர்மின்விளக்கு அமைக்கப்பட்டது. இந்த நிலையில் சமீபகாலமாக உயர்மின்விளக்கு சரிவர எரிவதில்லை. இதனால் அந்த பகுதி முழுவதும் இருள் சூழ்ந்து கிடக்கிறது. இதன் காரணமாக பொதுமக்கள் அந்த பகுதியில் அச்சத்துடன் பயணம் செய்து வருகின்றனர். மேலும், வாகன ஓட்டிகளும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். எனவே  சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தேரழந்தூர் கடைவீதியில் உள்ள உயர்மின்விளக்கு ஒளிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-பொதுமக்கள், தேரழந்தூர்.


மேலும் செய்திகள்