அரசு பஸ் கண்டக்டர் வீட்டில் கொள்ளை முயற்சி
நிலக்கோட்டையில் அரசு பஸ் கண்டக்டர் வீட்டில் கதவை உடைத்து கொள்ளை முயற்சி நடந்தது. பொதுமக்கள் திரண்டு வந்ததால், மர்ம நபர்கள் ஓட்டம் பிடித்தனர்.;
நிலக்கோட்டை
அரசு பஸ் கண்டக்டர்
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை பேரூராட்சிக்கு உட்பட்ட மெகாசிட்டி பகுதியை சேர்ந்தவர் ஜேசுராஜ். இவர், பழனி அரசு போக்குவரத்து கழகத்தில் கண்டக்டராக பணிபுரிந்து வருகிறார். அவருடைய மனைவி மரியலில்லி புஷ்பம் (வயது 47). நேற்று முன்தினம் இரவு ேஜசுராஜ் பணிக்கு சென்று விட்டார்.
மரியலில்லி புஷ்பம், அவரது மகள் பிரியா ஆகியோர் வீட்டின் கதவை பூட்டி விட்டு படுக்கை அறையில் தூங்கி கொண்டிருந்தனர். நள்ளிரவில் கதவை உடைத்து மர்ம நபர்கள் 3 பேர் வீட்டுக்குள் புகுந்தனர்.
வீட்டின் ஒரு அறையில் இருந்த பீரோவை உடைத்து அதில் ஏதேனும் நகை, பணம் இருக்கிறதா? என்று அவர்கள் தேடினர். இதனால் பீரோவில் இருந்த துணி மற்றும் பொருட்கள் ஆங்காங்கே சிதறி கிடந்தன. பீரோவில் நகை, பணம் எதுவும் சிக்கவில்லை.
இதனால் ஏமாற்றம் அடைந்த கொள்ளையர்கள், வீட்டின் படுக்கை அறை கதவை உடைத்து திறக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அந்த அறையில் தான் தாயும், மகளும் தூங்கி கொண்டிருந்தனர்.
தங்கைக்கு தகவல்
படுக்கை அறை கதவை கம்பியால் நெம்பி, கொள்ளையர்கள் திறக்க முயற்சி செய்தனர். மேலும் அவர்கள் ஒருவருக்கொருவர் பேசி கொண்டிருந்தனர்.
திருடர்கள் வீட்டுக்குள் புகுந்ததையும், படுக்கை அறையின் கதவை உடைக்க முயற்சிப்பதையும் அறிந்த தாயும், மகளும் பதற்றம் அடைந்தனர். அச்சத்தின் உச்சத்துக்கு சென்ற அவர்கள் செய்வதறியாது திகைத்தனர்.
அந்த நேரத்தில், நிலக்கோட்டை இ.பி.காலனியில் வசிக்கிற தங்கை மல்லிகாவுக்கு தகவல் தெரிவிக்க மரியலில்லி புஷ்பம் முடிவு செய்தார். அதன்படி தங்கை மல்லிகாவுக்கு செல்போன் மூலம் மரியலில்லி புஷ்பம் தகவல் தெரிவித்தார்.
கொள்ளையர்கள் ஓட்டம்
வீட்டின் கதவை உடைத்து கொள்ளையர்கள் உள்ளே புகுந்து விட்டதாகவும், உடனடியாக தங்களது உறவினர்களை அழைத்து வருமாறும் மரியலில்லி புஷ்பம் கூறி விட்டு இணைப்பை துண்டித்து விட்டார்.
இதனால் பதறிப்போன மல்லிகா, அக்கம்பக்கத்தினர் 7 பேருடன் தனது அக்காள் வீட்டை நோக்கி மோட்டார் சைக்கிள்களில் வந்தார். பொதுமக்கள் திரண்டு வருவதை கண்ட கொள்ளையர்கள் அங்கிருந்து தப்பித்தோம், பிழைத்தோம் என்று வெளியேறி ஓட்டம் பிடித்தனர்.
அக்கம்பக்கத்தினருடன் மல்லிகா வீட்டுக்குள் சென்றார். அதன்பிறகே தாயும், மகளும் நிம்மதி அடைந்தனர். படுக்கை அறை கதவை திறந்து வெளியே வந்தனர்.
போலீஸ் வலைவீச்சு
நள்ளிரவில் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் குறித்து, நிலக்கோட்டை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.
பின்னர் பொதுமக்கள் உதவியுடன் போலீசார் விடிய, விடிய கொள்ளையர்களை தேடினர். இருப்பினும் யாரும் சிக்கவில்லை. இது தொடர்பாக போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாலமுத்தையா வழக்குப்பதிவு செய்து, கொள்ளையர்களை வலைவீசி ேதடி வருகிறார்.
வீட்டில் ஆட்கள் இல்லை என்று கருதி மர்ம நபர்கள் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டது போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
பொதுமக்கள் பீதி
இதேபோல் நிலக்கோட்டை காமராஜர் நகர், அரண்மனைக்கோட்டை தெரு, இ.பி. காலனி உள்ளிட்ட இடங்களிலும் மோட்டார் சைக்கிள்கள் மற்றும் வீட்டில் உள்ள பொருட்களை மர்ம நபர்கள் திருடி சென்ற வண்ணம் உள்ளனர். இதனால் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர்.
நிலக்கோட்டை பகுதியில் தொடர் திருட்டை தடுக்க இரவு ரோந்து பணியை தீவிரப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.