தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 2112 வழக்குகளுக்கு சமரச தீர்வு
தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 2112 வழக்குகளுக்கு சமரச தீர்வு
திருப்பூர்,
திருப்பூர் மாவட்டத்தில் தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 2,112 வழக்குகளுக்கு ரூ.47 கோடியே 99 லட்சம் மதிப்பில் சமரச தீர்வு காணப்பட்டது.
தேசிய மக்கள் நீதிமன்றம்
தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும் தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு உத்தரவின் பேரில் நேற்று திருப்பூர் மாவட்டம் முழுவதும் கோர்ட்டுகளில் 20 அமர்வுகளாக தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது. திருப்பூர் மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் தேசிய மக்கள் நீதிமன்றத்தை, முதன்மை மாவட்ட நீதிபதி ஸ்வர்ணம் நடராஜன் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்.
பல்லடம் இச்சிப்பட்டியை சேர்ந்த பரமசிவம் (வயது 43) என்பவர் விசைத்தறி உரிமையாளர். இவர் கடந்த 28-4-2018 அன்று செம்மிபாளையம் அருகே இருசக்கர வாகனத்தில் சென்றபோது தனியார் பஸ் மோதி இறந்தார். அவருடைய மனைவி மற்றும் 2 குழந்தைகள் விபத்து இழப்பீடு கேட்டு மோட்டார் வாகன விபத்து தீர்ப்பாயத்தில் வழக்கு தொடுத்தனர். நேற்று நடந்த தேசிய மக்கள் நீதிமன்றத்தில் சமரச தீர்வு காணப்பட்டது. இதில் பரமசிவத்தின் குடும்பத்தினருக்கு ரூ.65 லட்சம் இழப்பீடு பெறுவதற்கான உத்தரவு வழங்கப்பட்டது. பாதிக்கப்பட்டவர் தரப்பில் வக்கீல் பாலகுமார் ஆஜராகி வாதாடினார்.
2,112 வழக்குகளுக்கு தீர்வு
தேசிய மக்கள் நீதிமன்றத்தில் மொத்தம் 4 ஆயிரத்து 140 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதில் 468 மோட்டார் வாகன விபத்து வழக்குகள், 311 சிவில் வழக்குகள், 30 காசோலை மோசடி வழக்குகள், 7 குடும்ப நல வழக்குகள் உள்பட 2 ஆயிரத்து 112 வழக்குகளுக்கு ரூ.47 கோடியே 99 லட்சத்து 91 ஆயிரத்து 749 மதிப்பில் தீர்வு காணப்பட்டது.
ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதி ராமசாமி, நிரந்தர மக்கள் நீதிமன்ற தலைவர் சுகந்தி, 2-வது கூடுதல் மாவட்ட நீதிபதி அணுராதா, தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் புகழேந்தி, மோட்டார் வாகன விபத்துஇழப்பீடு தீர்ப்பாய நீதிபதி நாகராஜன், முதன்மை சார்பு நீதிபதி சந்திரசேகரன், முதன்மை மாவட்ட உரிமையியல் நீதிபதி பாரதிபிரபா, கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிபதி விக்னேஷ் மது, குற்றவியல் நீதித்துறை நடுவர்கள் கார்த்திகேயன், ராமநாதன், உதயசூர்யா, வக்கீல் சங்க தலைவர்கள், வக்கீல்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.