5 ஆயிரம் மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை
வேதாரண்யம் பகுதியில் கடல் சீற்றத்தால் 5 ஆயிரம் மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை
வேதாரண்யம்:
வேதாரண்யம் பகுதியில் கடல் சீற்றத்தால் 5 ஆயிரம் மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை.
கடல் சீற்றம்
நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுகா ஆறுகாட்டுத்துறை, புஷ்பவனம், வெள்ளப்பள்ளம், வானவன்மகாதேவி, கோடியக்கரை, மணியன்தீவு உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்களில் உள்ள மீனவர்கள் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த தொடர் மழையால் மீனவர்கள் 7 நாட்களாக மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை. இதனை தொடர்ந்து மழை நின்றதால் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்று வந்தனர்.
மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை
இந்த நிலையில் நேற்று வேதாரண்யம் தாலுகா பகுதியில் சூறைக்காற்று வீசியதால் கடல் சீற்றமாக காணப்பட்டது. இதனால் 5 ஆயிரம் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை. மேலும் வேதாரண்யம், புஷ்பவனம் பகுதியில் கடற்கரையில் கடல் சேறு கிடப்பதால் படகை கடலுக்குள் கொண்டு செல்ல முடியாமல் சிரமப்படுகின்றனர்.
சேற்றில் வலைகள் சிக்கி கொள்வதால் மீனவர்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.மீனவர்கள் மீன்பிடிக்க செல்லாததால் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பைபர் படகுகள் கரையோரத்தில் பாதுகாப்பாக நிறுத்தி வைத்திருந்தனர்.மீனவர்கள் மீன்பிடிக்க செல்லாததால் கடற்கரை பகுதிகள் வெறிச்சோடி கிடந்தன.
பரவி கிடக்கும் கடல் சேறு
இதுகுறித்து மீனவர்கள் கூறுகையில், வேதாரண்யம் பகுதியில் சூறைக்காற்று வீசியதால் கடல் சீற்றமாக காணப்பட்டதால் மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை. இதனால் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் வேலையின்றி தங்களது வீடுகளில் முடங்கி உள்ளனர். வேதாரண்யம், புஷ்பவனம் கடற்கரை பகுதிகளில் ஒரு கிலோமீட்டர் தூரம் கடல் சேறு பரவி கிடக்கிறது.
இந்த கடல் சேறு தானாகவே கரைந்து கடலுக்கு செல்ல ஒருவாரமாகும். கடற்கரையில் 1 கிலோ மீட்டர் தூரம் கடல் சேறு பரவி இருப்பதால் பைபர் படகுகளை மீன்பிடிக்க கொண்டு செல்ல மிகவும் சிரமமாக உள்ளது. வடகிழக்கு காற்று தணிந்த பிறகுதான் மீன் பிடிக்கச் செல்ல முடியும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.