முட்டைகோஸ் அறுவடை செய்யும் பணி மும்முரம்
முட்டைகோஸ் அறுவடை செய்யும் பணி மும்முரம்
கோத்தகிரி
கோத்தகிரி பகுதியில் முட்டைகோஸ் அறுவடை செய்யும் பணி மும்முரமாக நடந்து வருகிறது.
மலைக்காய்கறிகள்
நீலகிரி மாவட்டத்தில் தேயிலைக்கு அடுத்தப்படியாக கேரட், பீட்ரூட், உருளைக்கிழங்கு, முட்டைகோஸ், மேரக்காய், நூல்கோல், பீன்ஸ், காலி பிளவர் உள்ளிட்ட மலைகாய்கறிகள் அதிகளவில் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.
இந்த காய்கறிகளை அறுவடை செய்யும் விவசாயிகள் விற்பனைக்காக உள்ளூர் மற்றும் மேட்டுப்பாளையம் காய்கறி மண்டிகளுக்கு அனுப்பி வைத்து வருகிறார்கள். அங்கிருந்து பிற மாவட்டங்களுக்கு அனுப்பப்பட்டு வருகிறது.
முட்டைகோஸ் அறுவடை
இந்த நிலையில் கோத்தகிரி அருகே உள்ள ஈளாடா, கதவுத்தொரை, கட்ட பெட்டு, நெடுகுளா உள்ளிட்ட பகுதிகளில் முட்டைகோஸ் அதிகளவில் பயிரிடப்பட்டு உள்ளது.
கோத்தகிரி சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த மாதம் தொடர்ந்து பலத்த மழை பெய்ததால் முட்டைகோஸ் பயிர்கள் அழுகி வீணாகும் நிலை ஏற்பட்டது.
இதையடுத்து முட்டைகோசை அறுவடை செய்ய விவசாயிகள் முடிவு செய்தனர்.
அதன்படி தற்போது முட்டைகோஸ் அறுவடை செய்யும் பணி மும்முரமாக நடந்து வருகிறது. அவற்றை மேட்டுப்பாளையம் மற்றும் கோத்தகிரி காய்கறி மண்டிகளுக்கு விவசாயிகள் அனுப்பி வைத்தனர்.
இது குறித்து விவசாயிகள் கூறியதாவது:-
விவசாயிகள் மகிழ்ச்சி
முட்டைகோஸ் கடந்த சில நாட்களுக்கு முன்பு கிலோ ரூ.10 முதல் ரூ.15 வரை கொள்முதல் செய்யப்பட்டது. இதனால் எங்களுக்கு நஷ்டம் ஏற்பட்டது. இந்த நிலையில் வரத்து குறைவு காரணமாக அதன் விலை உயர்ந்து உள்ளது.
தற்போது மேட்டுப்பாளையம் காய்கறி மண்டிகளில் முட்டைகோசின் தரத்துக்கு ஏற்ப கிலோ ரூ.30 முதல் ரூ.35 வரை கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. இதனால் லாபம் கிடைப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.