வளர்ப்பு யானை தாக்கி வன ஊழியர் படுகாயம்
வளர்ப்பு யானை தாக்கி வன ஊழியர் படுகாயம்
கூடலூர்
முதுமலையில் ரோந்து பணியில் ஈடுபட்ட போது வளர்ப்பு யானை தாக்கி வன ஊழியர் படுகாயம் அடைந்தார். அவருக்கு கோவை அரசு ஆஸ்பத்திரி யில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
வளர்ப்பு யானைகளுடன் ரோந்து
முதுமலை புலிகள் காப்பகத்தில் காட்டுயானை, மான், புலி, கரடி, செந்நாய், காட்டெருமை உள்ளிட்ட வனவிலங்குகள் உள்ளன. மேலும் கேரளா, கர்நாடகா மாநிலங்களின் எல்லையோர வனப்பகுதியும் இருப்பதால் வன குற்றங்கள் மற்றும் சமூக விரோதிகள் நடமாட்டத்தை தடுக்கும் வகையில் வனத்துறையினர் தினமும் ரோந்து பணியில் ஈடுபடுவது வழக்கம்.
இந்த ரோந்தின்போது கும்கி யானைகளும் வனத்துறையினருடன் செல்லும். இந்த நிலையில் இந்திரா, சுமங்களா, ஜான் உள்ளிட்ட வளர்ப்பு யானைகளுடன் வன காவலர் பெருமாள் (வயது 45) உள்ளிட்ட வன ஊழியர்கள் தெப்பக்காடு வனச்சரகத்துக்கு உட்பட்ட இம்பரல்லா காஞ்சி கட்டி பகுதியில் ரோந்து சென்றனர்.
திடீரென்று தாக்கியது
அப்போது திடீரென வளர்ப்பு யானை ஜான் முரண்டு பிடித்தது. பின்னர் அது கண்ணிமைக்கும் நேரத்தில் வன காவலர் பெருமாளை துதிக்கையால் தூக்கி வீசியது. இதில் படுகாயம் அடைந்தார். இதைக்கண்ட பாகன்கள் மற்றும் வன ஊழியர்கள் வளர்ப்பு யானை ஜானை உடனடியாக கட்டுப்படுத்தினர்.
பின்னர் படுகாயத்துடன் உயிருக்கு போராடிய பெருமாளை மீட்டு கூடலூர் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
அதிகாரிகள் விசாரணை
முன்னதாக இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும், வனச்சரகர் மனோஜ் தலைமையிலான வனத்துறை அதிகாரிகள் அங்கு சென்று பாாவையிட்டு விசாரணை செய்தனர். தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. வளர்ப்பு யானை வனத்துறை ஊழியரை தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.