மக்கள் நீதிமன்றத்தில் 1,760 வழக்குகளுக்கு தீர்வு
மக்கள் நீதிமன்றத்தில் 1760 வழக்குகளுக்கு தீர்வு
கோவை
கோவை மாவட்டத்தில் நடைபெற்ற மக்கள் நீதிமன்றம் மூலம் 1,760 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.
மக்கள் நீதிமன்றம்
கோர்ட்டுகளில் ஏராளமான வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதில் சமரசம் செய்து கொள்ளக்கூடிய வழக்குகளுக்கு விரைந்து தீர்வு காணும் வகையில் ஆண்டுதோறும் மக்கள் நீதிமன்றம் நடத்தப்படுகிறது.
சுப்ரீம் கோர்ட்டு வழிகாட்டுதல் படி 3 மாதங்களுக்கு ஒருமுறை மக்கள் நீதிமன்றம் நடத்தப்படுகிறது.
அதன்படி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் கோவை ஒருங்கிணைந்த கோர்ட்டில் நேற்று மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது.
இதை மாவட்ட முதன்மை நீதிபதி சக்திவேல் தொடங்கி வைத்தார்.
சமரச தீர்வு
மக்கள் நீதிமன்றத்தில் குடும்பநல வழக்குகள், காசோலை வழக்குகள், வாகன விபத்து இழப்பீடு வழக்குகள் உள்ளிட்ட வழக்குகள் எடுத்து கொள்ளப்பட்டது.
இது தொடர்பாக சம்பந்தப்பட்டவர்களை அழைத்து நீதிபதிகள் முன்னிலையில் பேசி சமரசம் தீர்வு காணப்பட் டது.
அதற்குரிய சான்றிதழ்களை முதன்மை நீதிபதி சக்திவேல் வழங்கினார்.
கோவை மாவட்டத்தில் பல இடங்களில் நேற்று நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் ஒரே நாளில் மொத்தம் 1,760 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டன.
சில குடும்ப வழக்குகளில் தீர்வு காணப்பட்டு, கணவன்-மனைவி சேர்ந்து வாழ முடிவெடுத்தனர்.