இளம்பெண் தற்கொலை வழக்கில் திடீர் திருப்பம் திருமணமான 22-வது நாளில் கணவரை தீர்த்துக்கட்ட திட்டமிட்டது அம்பலம் கூலிப்படையினர் 5 பேர் கைது

கம்பத்தில் திருமணமான 22-வது நாளில் கணவரை தீர்த்துக்கட்ட புதுப்பெண் திட்டமிட்டது அம்பலமாகி உள்ளது. இதையடுத்து, கூலிப்படையினர் 5 பேர் கைது செய்யப்பட்டனர்.;

Update: 2021-12-11 13:41 GMT

கூடலூர்:
தேனி மாவட்டம் கம்பம் குரங்குமாயன் தெருவை சேர்ந்தவர் கவுதம் (வயது 24) கேபிள் டி.வி. ஊழியர். இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த புவனேஸ்வரிக்கும் (21) கடந்த மாதம் 10-ந்தேதி திருமணம் நடந்தது. இந்தநிலையில் கடந்த 8-ந்தேதி புவனேஸ்வரி, வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
 இதுகுறித்து கம்பம் வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். மேலும் திருமணமான ஒரு மாதத்துக்குள் புதுப்பெண் தற்கொலை செய்ததால், அவரது சாவு குறித்து ஆர்.டி.ஓ.(பொறுப்பு) சாந்தியும் விசாரணை நடத்தினார்.
 திருமண வாழ்க்கை ஏமாற்றம்
இதனிடையே போலீசார் விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. அதன் விவரம் வருமாறு:-
புவனேஸ்வரிக்கு, தொடக்கத்தில் இருந்தே கவுதமை பிடிக்கவில்லை. அவர் திருமணத்துக்கு முன்பு போலீஸ் தேர்வுக்கு பயிற்சி எடுத்தார். மேலும் வேலை பார்ப்பவரையே திருமணம் செய்து கொண்டு, தானும் வெளியில் சென்று வேலை செய்ய வேண்டும் என்று விரும்பினார். இதனால் அவருக்கு மண வாழ்க்கை ஏமாற்றமாக இருந்தது. எனவே அவர் கவுதமை கொலை செய்ய திட்டமிட்டார். 
புவனேஸ்வரி போலீஸ் தேர்வுக்கு பயிற்சி எடுத்த போது, கம்பம் அருகே உள்ள கோவிந்தன்பட்டியை சேர்ந்த நிரஞ்சன் (22) என்பவருடன் அவர் நட்பாக பழகி இருந்தார். 
  காரை ஏற்றி கொல்ல திட்டம்
இந்தநிலையில் புவனேஸ்வரி தனது நகையை வங்கியில் அடகு வைத்து ரூ.75 ஆயிரம் வாங்கினார். பின்னர் அந்த பணத்தை நிரஞ்சனிடம் கொடுத்து, தான் கணவரை வெளியில் அழைத்து வருவதாகவும், அங்கு அவரை காரை ஏற்றி கொன்று விடுமாறும் கூறினார். 
இந்த திட்டத்தின்படி திருமணமான 22-வது நாளில், அதாவது கடந்த 2-ந்தேதி புவனேஸ்வரி கணவரிடம் ஆசைவார்த்தை கூறி அவரை ஸ்கூட்டரில் வெளியில் அழைத்து வந்தார். 
கூடலூர் அருகே தம்மணம்பட்டி பகுதியில் உள்ள தொட்டிபாலத்தை அவர்கள் பார்த்துவிட்டு திரும்ப வந்து கொண்டு இருந்தனர். அப்போது ஸ்கூட்டர் பழுதாகிவிட்டது. இதனால் கவுதம் ஸ்கூட்டரை தள்ளிக்கொண்டு நடந்து வந்தார்.
 அப்போது பின்னால் ஒரு கார் வேகமாக வந்து கவுதமின் ஸ்கூட்டர் மீது மோதியது. இதில் காயம் இன்றி அவர் உயிர் தப்பினார். 
போலீசில் புகார்
இந்த சமயத்தில் காரில் இருந்து இறங்கிய 5 பேர் கவுதமை கீழே தள்ளி கால்களால் மிதித்து சரமாரியாக தாக்கினர். பின்னர் அவர்கள் காரில் ஏறி தப்பி சென்று விட்டனர். 
இதையடுத்து காரின் கேரள பதிவெண்ணை அடிப்படையாக வைத்து, கூடலூர் தெற்கு போலீஸ் நிலையத்தில் கவுதம் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மோதிய கார் மற்றும் 5 பேர் கும்பலை வலைவீசி தேடி வந்தனர். 
இது, புவனேஸ்வரிக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் கணவரை கொலை செய்ய தான் திட்டம் போட்டது போலீசுக்கு தெரிந்து குட்டு அம்பலமாகி விடும் என்று அவர் அச்சம் அடைந்தார். இதையடுத்து புவனேஸ்வரி வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். 
5 பேர் கைது
இதனிடையே கவுதம் மீது காரை ஏற்றி கொலை செய்ய முயன்றவர்கள் குறித்து போலீசுக்கு துப்பு துலங்கியது. மேலும் இதில் புவனேஸ்வரிக்கு ஏற்கனவே பழக்கமான நிரஞ்சன், அவரது நண்பர்களான கோவிந்தன்பட்டியை சேர்ந்த மனோஜ் (20), சத்யா (21), பிரதீப் (37) மற்றும் 16 வயது சிறுவன் ஆகியோர் கூலிப்படை போல செயல்பட்டு இருப்பது தெரியவந்தது. 
இதையடுத்து அவர்கள் 5 பேரையும் போலீசார் பிடித்து விசாரித்தனர். அப்போது அவர்கள், புவனேஸ்வரி நிரஞ்சனிடம் கூறியதன் பேரில் கடந்த 2-ந் தேதி தொட்டி பாலத்திற்கு வந்து கவுதமை காரை ஏற்றி கொல்ல முயன்றதாகவும், இதற்காக ரூ.75 ஆயிரம் வாங்கியதாகவும் தெரிவித்தனர். 
இதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் இரவு அவர்கள் 5 பேரையும் போலீசார் கைது செய்தனர். திருமணமான 22-வது நாளில் கணவரை தீர்த்துக்கட்ட இளம்பெண் திட்டமிட்டதும், 5 பேர் கைது செய்யப்பட்டதும் கம்பம், கூடலூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
-----------
புவனேஸ்வரி
------------

மேலும் செய்திகள்