கூரியர் மூலம் கஞ்சா, குட்கா கடத்தினால் கடும் நடவடிக்கை போலீஸ் டி.ஐ.ஜி. விஜயகுமாரி எச்சரிக்கை

தேனி மாவட்டத்தில் கூரியர் மூலம் கஞ்சா, குட்கா கடத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று டி.ஐ.ஜி. விஜயகுமாரி எச்சரித்தார்.

Update: 2021-12-11 13:28 GMT
தேனி:
தேனி மாவட்டத்தில் கூரியர் மற்றும் பார்சல் சேவைகள் மூலமாக கஞ்சா, குட்கா பொருட்கள் போன்றவை கடத்தப்படுவதாக போலீசாருக்கு புகார்கள் வந்தன. இதை தடுக்கும் வகையில் கூரியர் மற்றும் பார்சல் சேவை நிறுவன உரிமையாளர்கள், மேலாளர்களுக்கான ஆலோசனை கூட்டம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நேற்று நடந்தது.
கூட்டத்துக்கு திண்டுக்கல் சரக போலீஸ் டி.ஐ.ஜி. விஜயகுமாரி தலைமை தாங்கினார். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவீன் உமேஷ் டோங்கரே முன்னிலை வகித்தார். இதில் மாவட்டத்தில் கஞ்சா, குட்கா போன்ற போதைப் பொருட்கள் விற்பனையை தடுப்பது குறித்தும், அதற்கு நிறுவனங்கள் ஒத்துழைப்பு அளிப்பது குறித்தும் பல்வேறு அறிவுரைகள் கூறப்பட்டன.
கடும் நடவடிக்கை
கூட்டத்தில் போலீஸ் டி.ஐ.ஜி. விஜயகுமாரி பேசும்போது, "தேனி மாவட்டத்தில் கஞ்சா கடத்தல் மற்றும் விற்பனை செய்பவர்கள் மீதும், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை மற்றும் கடத்தல் தொடர்பாகவும் தொடர்ச்சியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதுபோன்ற சட்டவிரோத செயல்கள் எங்கு நடந்தாலும் தயக்கமின்றி போலீசாருக்கு தகவல் கொடுக்கலாம். கூரியர் மற்றும் பார்சல் சேவைகள் மூலம் கஞ்சா மற்றும் குட்கா பொருட்கள் கடத்தலை தடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எனவே, கூரியர், பார்சல் சேவை நிறுவனங்களுக்கு வரும் பார்சல்களில் ஏதேனும் சந்தேகம் ஏற்பட்டால் உடனடியாக கஞ்சா மற்றும் குட்கா கடத்தல் தடுப்புக்காக அமைக்கப்பட்டுள்ள தனிப்படையினருக்கு தகவல் கொடுக்க வேண்டும். போலீசாரின் அறிவுரைகளை மீறி இதுபோன்ற நிறுவனங்களின் வழியாக கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் கடத்துவது கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.
இதில் கலந்துகொண்ட அனைவருக்கும் தனிப்படையினரின் செல்போன் எண்கள் வழங்கப்பட்டது. இதில் கூரியர் மற்றும் பார்சல் சேவை நிறுவன உரிமையாளர்கள், மேலாளர்கள் பலர் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்