மீஞ்சூர் அருகே மோட்டார் சைக்கிள்-லாரி மோதல்; பெண் பலி

திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அருகே கொசஸ்தலை ஆற்று பாலத்தின் சாலையில் மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் ஒருவர் பலியானார், 2 பேர் படுகாயம் அடைந்தனர்.

Update: 2021-12-11 09:44 GMT
மீஞ்சூர், 

மீஞ்சூர் அருகே உள்ள மணலி புதுநகரில் வசித்து வந்தவர் சரோஜா (வயது 85). இவர் தனது மகளை பார்ப்பதற்காக திருவள்ளூர் சென்றுள்ளார். பின்னர் அங்கே இருந்து தனது சகோதரியின் மகளான விஜயா (40) மற்றும் அவரது மகன் சத்யா (28) ஆகியோருடன் மோட்டார் சைக்கிளில் மீஞ்சூர் திரும்பி வந்து கொண்டிருந்தார்.

மீஞ்சூர் நெமிலிச்சேரி சென்னை வெளிவட்ட சாலை சீமாபுரம் கிராமத்தின் அருகே கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள 400 அடி சாலையில் வந்து கொண்டிருந்தபோது அதிவேகமாக வந்த லாரி மோட்டார் சைக்கிள் மீது மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே சரோஜா பரிதாபமாக உயிரிழந்தார். பலத்த காயமடைந்த விஜயா மற்றும் சத்யா சென்னை ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தகவல் அறிந்த மீஞ்சூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சரோஜாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து மீஞ்சூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்