கொழும்பு, துபாயில் இருந்து கடத்தல்: சென்னை விமான நிலையத்தில் ரூ.93 லட்சம் தங்கம் பறிமுதல்

கொழும்பு, துபாயில் இருந்து சென்னை விமானநிலையம் கடத்தி வந்த ரூ.93 லட்சம் தங்கத்தை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

Update: 2021-12-11 00:15 GMT
ஆலந்தூர்,

சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்திற்கு துபாயில் இருந்து வந்த விமானத்தில் பயணிகளை சுங்க இலாகா அதிகாரிகள் கண்காணித்தனர். அப்போது வாலிபர் ஒருவரை சந்தேகத்தின் பேரில், நிறுத்தி விசாரித்தனர்.அதில், முன்னுக்கு பின் முரணாக பேசியதால் அவரது உடமைகளை சோதனை செய்தனர். அதில் அவர் கொண்டு வந்த கம்ப்யூட்டரில் பயன்படுத்தும் நிலை வட்டு (ஹார்டு டிஸ்க்) பிரித்து பார்த்தபோது, தங்கத்தை மறைத்து வைத்து கடத்தி வந்ததை கண்டுபிடித்தனர். மேலும் அதிலிருந்த ரூ.19 லட்சத்து 98 ஆயிரம் மதிப்புள்ள 459 கிராம் தங்கத்தை கைப்பற்றினார்கள்.

அதைத்தொடர்ந்து சார்ஜாவில் இருந்து இலங்கை தலைநகர் கொழும்பு வழியாக வந்த விமானத்தில் பயணம் செய்த 2 பயணிகளை விமான நிலைய சுங்க இலாகா அதிகாரிகள் சந்தேகத்தின் பேரில் சோதனை செய்தனர்.

உள்நாட்டு பயணி

அப்போது அவர்களது உள்ளாடைக்குள் தங்கத்தை மறைத்து வைத்து கடத்தி வந்ததை கண்டுப்பிடித்தனர். 2 பேரிடம் இருந்து ரூ.30 லட்சத்து 4 ஆயிரம் மதிப்புள்ள 690 கிராம் தங்கத்தை கைப்பற்றினார்கள்.

மேலும், துபாயில் இருந்து கேரள மாநிலம் திருவனந்தபுரம் வழியாக சென்னை வந்த பயணிகளை கண்காணித்தனர். அப்போது திருவனந்தபுரத்தில் இருந்து சென்னைக்கு உள்நாட்டு பயணியாக வந்த வாலிபரை நிறுத்தி சோதனை செய்தனர். அந்த நேரத்தில் உள்நாட்டு பயணியான தன்னை ஏன் சோதனை செய்கிறீர்கள்? என்று அவர் கேட்டார்.

ரூ.93 லட்சம் தங்கம்

ஆனாலும் அதிகாரிகள் சந்தேகத்தின் பேரில் நடத்திய சோதனையில் அவா் உள்ளாடைக்குள் தங்கத்தை மறைத்து கடத்தி வந்ததை கண்டறிந்தனர். அவரிடமிருந்து ரூ.43 லட்சத்து 12 ஆயிரம் மதிப்புள்ள 995 கிராம் தங்கத்தை கைப்பற்றினார்கள்.

ஆக மொத்தம் 4 பேரிடமும் இருந்து ரூ.93 லட்சத்து 14 ஆயிரம் மதிப்புள்ள 2 கிலோ 144 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்த சுங்க இலாகா அதிகாரிகள் யாருக்காக தங்கம் கடத்தி வரப்பட்டது என பிடிப்பட்டவர்களிடம் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்